Class 18

இலக்கண வகுப்பு- 18
தொல்:சொல்: இயல்- 2

1
முதலாம் வேற்றுமை:

இது பெயர், எழுவாய் வேற்றுமை எனவும் பெயர் பெறும். இம் முதல் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை என்பதை மனங் கொள்க.

” அவற்றுள்; எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே ” ( 65)

இ-ள்:
மேற்சொன்ன வேற்றுமையுள், முதற்கண் பெயர் எனக் கூறப்பட்ட வேற்றுமையானது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலையாம் எ-று

துணையாய் நிற்கும் நிலையாவது, உருபும் விளியும் ஏற்காமல் பிறிதொன்றனொடு தொகாமல் நிற்கும் நிலையாம்.

எ-டு:
இராமன் காடேகினான்
தொல்காப்பியர் இலக்கணம் செய்தார்.
மரம் வீழ்ந்தது.

2
இவ்வாறு நிற்கும் பெயர்/ எழுவாய் பயனிலைகளை ஏற்கும் என்கிறது இச்சூத்திரம்.

” பொருண்மை சுட்டல்
வியங்கொள வருதல்
வினைநிலை உரைத்தல்
வினாவிற் கேற்றல்
பண்பு கொள வருதல்
பெயர்கொள வருத லென்று
அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே “
(66) ————-

இ-ள்:
பொருண்மை சுட்டல் — பசு உண்டு, பசு பெயர்/எழுவாய். உண்டு பொருண்மைப் பயனிலை சுட்டியது.

வியங்கொள வருதல் — மன்னர் வாழ்க! – ( பெயர்/ எழுவாய், வாழ்க வியங்கொள வந்தது

வினைநிலை உரைத்தல் —
பாம்பு சீறியது ( பெயர்/எழுவாய், வினைப் பயனிலை) ———-

வினாவிற்கேற்றல் — அவன் யார்?

பண்புகொள வருதல் — கண்ணன் கரியன்

பெயர்கொள வருதல் — கோணங்கள் பல
( வியம் – ஏவல், கட்டளை, கொள்வது கோள்)

வியங்கோளுக்கு எ-டு:
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க ….

” ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீர் அடியார் எல்லாம் ” ( அருணகிரியார்)

வகுப்பு – 18 தொடர்ச்சி:

3
பெயர்ச் சொற்கள் பயனிலை கொள்ளும் என்றும், அவை 6 முறைகளில் எவ்வாறு பயனிலை கொண்டன என்றும் சென்ற நூற்பாவிற் கற்றோம். இந் நூற்பாவிலே எழுவாயாக வருகின்ற தொகைப் பெயர்களும் பயனிலை கொள்ளும் என உரைக்கிறார்,

” பெயரினாகிய தொகையுமா ருளவே
அவ்வு முரிய அப்பா லான ” ( 67)

இ-ள்:
பெயரும் பெயரும் தொக்க தொகையுமுள, அவையும் உரிய எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்கு எ-று

பெயர் தனியாக வருவது மட்டுமன்றி, பெயரும் பெயரும் சேர்ந்து வரும் தொகைச் சொற்களும் உள. இவையும் எழுவாய் வேற்றுமைக்குரிய பயனிலைகளைப் பெற்று வரும்.

எ-டு:

யானைக் கொம்பு. தமிழ்த்தாய், தமிழ்இலக்கியம்.

4
அடுத்து எழுவாய், தோன்றா எழுவாய் பற்றிப் பார்ப்போம்.
எழுவாய் என மட்டும் கூறின் அது ‘ தோன்றிய எழுவாய் ‘,
எழுவாய் தோன்றவில்லை
என்றால் அது ‘ தோன்றா எழுவாய் ‘ எனவறிக.

” எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப ” ( 68) …………………

இ-ள்:
மூன்றிடத்துப் பெயரும் செவிப்புலனாகத் தோன்றி நின்று பயனிலை கோடல் செவ்விது என்பர் ஆசிரியர் எ-று

இங்கு ‘ பெயர் ‘ என்றது எழுவாயை, ‘ அவ்வியல் ‘ என்றது பயனிலையை எனவுணர்க.

எ-டு:
” தில்லைக்குச் செல்வாயா? ” செல்வேன் “
இங்கு நீ, நான் என்பன தோன்றா எழுவாயாக நின்றன.

அப்பர் சுவாமிகள், 6 ஆம் திருமுறையின்கண்:

” முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையு மத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார்
ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே ” ——-

5
இங்கு பெயர்ச் சொல்லினது விசேட இயல்பைக் கூறுகிறார்.

” பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில்நிலை யொட்டும்
ஒன்றலங் கடையே “
( 70)
இ-ள்:
பெயர்ச் சொல்லானது காலந் தோன்ற வராது. வினைச் சொல்லோடு ஒக்கும் ஒரு கூறல்லாத
விடத்து எ-று
அதாவது தனித்து வரும் பெயர்ச் சொல் காலங் காட்டாது, ஆயின் தொழிலொடு இணைகையில் காலந் தோன்றும்.

எ-டு:

சுந்தரன், அபிராமி, அழகன், அழகி — இங்கு காலம் காட்டவில்லை.

சுந்தரன் உண்டான், அபிராமி ஆடினாள்- இங்கு காலம் காட்டியது.

‘ தொழில்நிலை ஒட்டும் ‘ என்றது வினையாலணையும் பெயரையாம் எனவறிக.

எ-டு:
உண்டவன், நடந்தவன், ஆடியவள், ஆடியவன்.

சம்பந்தர் தேவாரம்:

” எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
ஏத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும்
இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர்
கோணமா மலை அமர்ந்
தாரே “

வகுப்பு – 18 நிறைவு