இலக்கண வகுப்பு – 6, 03-12-2025. புணரியலின் தொடர்ச்சி
1 புணர்ச்சிக்குரிய இருமொழிகளின் இயல்பு:
“உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
இவ்வென வறியக் கிளக்குங் காலை
நிறுத்தச் சொல்லே குறித்துவரு கிளவியென்று ஆயீரியல
புணர்நிலைச் சுட்டே” (5-108)
மூன்று சொற்கள் புணர வராதென்றும், இரு சொற்களே புணர்வதற்குரியன என்றும், அவ்வகையால் புணர்ச்சிகள் நால்வகை என்றும் இச் சூத்திரம் உணர்த்திற்று.
புணரியலின் தொடர்ச்சி
அவையாவன :
- உயிரீறும் உயிர்முதலும் புணர்தல்
- உயிரீறும் மெய்முதலும் புணர்தல்
- மெய்யீறும் உயிர்முதலும் புணர்தல்
- மெய்யீறும் மெய்முதலும் புணர்தல்.
எ-டு :
ஆ + உறங்கிற்று = ஆவுறங்கிற்று
ஈ + மொய்த்தது = ஈமொய்த்தது.
ஆல் + இலை = ஆலிலை
ஆல் + வீழ்ந்தது = ஆல்வீழ்ந்தது.
இவ்வாறு நால்வகைப் புணர்ச்சிகளும் நிகழுங்காலை, மூவகைத் திரிபுகள் தோன்றும்.
புணரியலின் தொடர்ச்சி
“அவைதாம்;
மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று
இவ்வென மொழிப திரியுமாறே” (7-110)
அவை : தோன்றல்
திரிதல்
கெடுதல் என பின்னைய இலக்கணவாதிகள் உரைப்பர்,
இவற்றை நன்னூலார் ‘இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி’ எனக் கூறுகிறார்.
எ-டு:
பொன்+ குடம் = பொற்குடம் (இது மெய் பிறிதாதல் என்ற திரிதல்)
யானை+கோடு = யானைக்கோடு (இது மிகுதல் என்ற தோன்றல்)
மரம்+ வேர் = மரவேர் (இது குன்றல் என்ற கெடுதல்)
மீட்டல் வகுப்பு நிறைவு, காணொளியைப் பார்க்கவும்