Class 9

இலக்கண வகுப்பு – 9
தொல்: எழு: இயல் 6 – உருபியல் ( 24/12/2025)

வேற்றுமை உருபுகள் பெயர்ச் சொற்களோடு புணருவதைக் கூறும் இயல்.
புணர்ச்சி நடைபெறும் போது பெயர்களுக்கும், வேற்றுமை உருபுகளுக்கும் இடையே சாரியைகள் தோற்றம் பெறுகின்றன. அதனால் சில பெயர்ச் சொற்கள் வேறுபாடுகளை அடைகின்றன. இதில் 30 நூற்பாக்கள்.
1
அகரவீறு முதலியவற்றில் வேற்றுமை உருபு புணரும் போது ‘ இன் ‘ சாரியை தோன்றும்.
” அஆஉ ஊஏஔ என்னும் அப்பாலாறன் நிலைமொழி முன்னர்
வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை ” (1-174)

இ-ள்:
அஆஉஊஏஔ என்ற அக்கூற்று ஆறையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர், வேற்றுமை உருபுகள் வருமொழியாய் வந்த நிலைமைக்கு இடைவரும் சாரியை ‘ இன் ‘ சாரியையாகும் எ-று
எ-டு:
விளவினை = விள+இன்+ஐ. ( ஐ – 2 வே-மை)
விளவினொடு = விள+இன்+ஒடு. ( ஒடு – 3 வே-மை)
விளவிற்கு/விளவினற்கு = விள+இன்+கு.
( கு-4 வே-மை)

விளவினின் = விள+இன்+இன் ( இன்-5 வே-மை)
விளவினது = விள+இன்+அது (அது – 6 வே-மை)
விளவின்கண் = விள+இன்+கண் ( கண் – 7 வே-மை)
ஆவினை = ஆ+இன்+ஐ
ஆவினொடு = ஆ+இன்+ஒடு
ஆவினுக்கு = ஆ+இன்+கு

எடுத்துக் காட்டு திருமுறை:
“பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச் சிவாயவே “
( அப்பர் சுவாமிகள் – திருமுறை 4 )
( இதேவழி ஆ, உ, ஊ, ஏ, ஔ ஆகிய உயிரீறுகளுக்கும் ஒட்டுக)

2
அகரவீறுக்கு, பன்மைப் பெயர்கள் வரும்புழி, ‘ வற்று ‘ சாரியை வரும்.
” பல்லவை நுதலிய அகர இறுபெயர் வற்றொடு சிவணல் எச்சமின்றே ” ( 2-175)

இ-ள்:
பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரமானது, வற்றுச் சாரியையொடு பொருந்துதலை ஒழிதல் இல்லை எ-று

எ-டு:
பல்+ ஐ = பலவற்றை ( பலவற்றை)
இவ்வாறே, பலவற்றொடு, பலவற்றிற்கு, பலவற்றின், பலவற்றினது, பலவற்றின்கண் எனவரும்.
மேலும் ‘ யா ‘ , ‘ யாவை ‘ என்ற வினாவெழுத்து களுக்கும் வற்றுச் சாரியையே வரும்.

யா + ஐ = யாவற்றை, யாவற்றொடு, யாவற்றிற்கு, யாவற்றின்,யாவற்றினது, யாவற்றின்கண் எனவும் அமையும்.

3
இதேவழி, உகர ஈற்றிற்கு- சுட்டாக – ‘ அன் ‘ என்ற சாரியை வரும்.
” சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்மொழித் துகரம் கெடுமே ”(4-177)
இ-ள்:
சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகரவீற்றுச் சொல்லானது, அன் சாரியையோடும் பொருந்தி, தான் பொருந்திய மெய்யை ஒழித்து ( உகரம்) கெடும் எ-று
எ-டு:
அது+ஐ= அதனை
இது+ஐ = இதனை
உது+ஐ = உதனை

இவ்வாறே ஏனைய உருபுகளான ஒடு,கு,இன், அது,கண் ஆகியவற்றுடனும் ஒட்டுக.
இவ்வழியே, ஐகார ஈற்றுக்கும் கண்டு கொள்க! ( வற்றுச் சாரியையே வரும். அவற்றை, இவற்றை, உவற்றை)
4
‘நீ’ என்ற ஈகாரவீற்றுப் பெயருக்கு னகரவொற்றுச் சாரியை வரும்.
” நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயின் னகரம் ஒற்றா கும்மே ” ( 7-180)

இ-ள்:
நீ என்னும் ஒரு பெயர் நெடிதாகிய முதல் குறுகும், அவ்விடத்தே வரும் னகரம் ஒற்றாகும் எ-று
எ-டு:
நீ+ஐ = நின்னை
நீ+ஒடு = நின்னொடு
நீ+கு= நினக்கு/நினற்கு

” நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா ” – பாரதியார்
” ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் ” — வள்ளலார்
” நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்…
நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே”
— பெருமாள் திருமொழி
குலசேகராழ்வார்.

5
குற்றியலுகரம் ஈறாக வருகின்ற திசைகளின் பெயர், ஏழனுருபிற் சாரியை பெறாமலும், இன் சாரியை பெற்றும் வரும் என்கிறார் திரண தூமாக்கினியார்.
” ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி இயற்கையு மாகும்
ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே “
( 29-202)
இ-ள்:
‘ கண் ‘ என்ற ஏழாம் வேற்றுமை உருபிற்கு திசைப் பெயர்களின் முன்னர், இன் சாரியை நின்று முடிதலே அன்றி, இயல்பாகவும் முடியும்.

எ-டு:
வடக்கு+இன் = வடக்கின், கிழக்கின், தெற்கின், மேற்கின்.
ஆனால்,
வடக்கு+கண் = வடக்கண்
(வடக்கின் கண் என்பது பிழை) கிழக்கண், தெற்கண், மேற்கண் என்பன காண்க.

வன்றொண்டப் பெருமான் ஏழாம் திருமுறையில்;

” …மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்…”என அருளுகிறார்.

— இவ் வகுப்பு நிறைவு —