Literature Name : Yappu

  • Class 28

    இலக்கண வகுப்பு -28
    தொல்:சொல்: இயல்:இடையியல் -7 ( தொடர்)

    1
    அடுத்து, ‘ஏ’ கார இடைநிலை பற்றி உரைக்கிறார்.

    ” தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே
    ஈற்றசை யிவ்வைந் தேகா
    ரம்மே ” – ( 257)
    இ-ள்:
    தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை என ஏகாரம் ஐந்தாம் எ-று
    எ-டு:
    உண்டே மறுமை — தேற்ற ஏகாரம், தெளிவெனினும் ஒக்கும்.

    நீயே சொன்னாய்? — வினா ஏகாரம்

    அவர்களுள் இவளே அழகி — பிரிநிலை ஏகாரம்

    நிலமே நீரே தீயே வளியே வெளியே — எண் ஏகாரம்

    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே — ஈற்றசை ஏகாரம்

    ( திருமந்திரப் பாடல்கள், வெண்பாக்கள், அச்சோ பதிகம் ‘ஏ ‘ காரத்தில் நிறைவுறும்)

    எ-டு:
    ” அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
    குன்றே அனையாய் எனையாட் கொண்டபோதே கொண்டிலையோ?
    இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
    நன்றே செய்வாய் பிழை செய்வாய்? நானே இதற்கு நாயகமே?
    ( குழைத்தபத்து)

    ( அன்றே, குன்றே, போதே என்பன தேற்ற ஏகாரம்.
    எம்மானே, நாயகமே = ஈற்றசை ஏகாரம்
    கொண்டிலையோ — வினா ஏகாரம்
    எனக்குண்டோ — எதிர்மறை ஏகாரம்

    ” நீயோ பிழை செய்வாய்?”
    என வருவித்துப் பொருள் கொள்க. இது எதிர்மறை ஏகாரம்.

    2
    இனி ‘மற்று ‘ என்ற இடைச்
    சொல்.

    ” மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
    அப்பா லிரண்டென மொழிமனார் புலவர் “(262)

    இ-ள்:
    ‘மற்று’ எனும் இடைச் சொல், வினை மாற்றும், அசை நிலையுமென இரண்டாம் எ-று
    எ-டு:
    ” மற்று நீ வன்மை பேசி வன்றொன்டன் எனும் நாமம் ….” (சேக்கிழார்)
    ” மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாதமே மனம் பாவித்தேன் …”(சுந்தரர்)

    3
    இனி ‘அம்ம’ எனும் இடைச் சொல். இன்று வியப்பு, விளி போன்ற பொருளில் வந்த போதும், ஒன்றைக் கூறி ‘ அதனைக் கேள் ‘ எனச் சொல்லும் பொருளில் வரும் என்கிறார் தொல்காப்பியனார்.

    ” அம்ம கேட்பிக்கும் ” ( 276)

    இ-ள்:

    ‘அம்ம’ எனும் இடைச் சொல், ஒருவனை ஒருவன் ஒன்று கேள் என்று சொல்லுதற்கண் வரும் எ-று

    இவ்விடைச் சொல்லை மணிவாசகர் தனது கோயில் திருப் பதிகத்திலே வைத்துப் பாடியருளுகிறார்:

    ” புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் ” எனத் தொடங்கி, ” அற்றிலாத வரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே ” என முடிக்கிறார். இப் பதிகத்திலே ‘அம்ம’ நாம் அஞ்சுமாறே ” என்று இடைச் சொல்லை 10 தடவைகள் எடுத்தாண் டுள்ளார்.

    (வாழ், வாள் — இரு பாவனை)

    — இடையியல் நிறைவு –

    4
    அடுத்து ‘ உரியியலை ” ஆரம்பம் செய்கிறேன்.

    உரிச் சொற்கள் ஆவன செய்யுளுக்கு மட்டுமே உரிமை பூண்டன. செய்யுளில் இசை, குறிப்பு, பண்பு எனும் பொருளை உணர்த்துவதற்கு இவையே உரிமை கொண்டன என்பதனாலேயே ‘உரிச் சொல் ‘ எனப் பெயர் பெற்றது.

    இவ்வுரிச் சொற்கள் மூன்று வகைகள் எனப் பாகுபாடுகளைக் கொண்டன.

    1
    ஒரு பொருள் உணர்த்தும் ஒரு சொல்

    2
    பல பொருள் உணர்த்தும் ஒரு சொல்

    3
    ஒரு பொருள் உணர்த்தும் பல சொல்

    இவ்வுரிச் சொற்கள் இடைச் சொற்களை ஒருவாறு ஒத்து, தமக்குரிய இயல்போடு, தாம் சார்ந்த பெயரையும் வினையையும் அடியாகக் கொண்டு வெவ்வேறு பொருளை உணர்த்தி நிற்கும் என உரையாசிரியர் உரைப்பர்.

    • இவ்வகுப்பு நிறைவு –
  • Class 27

    இலக்கண வகுப்பு – 27,
    தொல்:சொல்: இயல் – 7, இடையியல்

    முதலில் சென்ற வகுப்பிலிருந்து மேலதிக விளக்கம் :

    வினையெஞ்சு கிளவிகள்/பெயரெஞ்சு கிளவிகள் எத்தனையோ உள்ளன. அவற்றை எல்லாம் குறிக்க இயலாமையால், அவற்றை இலகுவில் தெரிந்து கொள்ள, அவைபோலவே குறிக்கப் படும் சொல் வடிவங்களே
    ‘ வாய்பாடுகள் ‘ ஆகும்.

    நூற்பா 28 : செய் என்ற அடிப்படைக்குச் சொன்ன வாய்பாடுகள் இவை;

    செய்து — உண்டு
    செய்யூ/செய்பூ– தின்னூ, தின்பூ
    செய்பு — உண்ணுபு
    செய்தென — உண்ணென
    உண்ணியர் — செய்யியர்
    உண்ணிய — செய்யிய
    உணின் — செயின்
    உண்ண — செய
    உணற்கு — செயற்கு
    இவை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.

    நூற்பா 234:

    பெயரெஞ்சு கிளவி :

    செய்யும், செய்த இரண்டும் பெயரெச்ச வாய்பாடுகள். இவை, நிலம் பொருள் காலம் கருவி வினைமுதல் வினை எனும் 6 பெயர்களைக் கொண்டு முடியும்.

    வாழும் ஊர் — நிலம்
    விளையும் பயிர் — பொருள்.
    துயிலும் நேரம் — காலம்
    எழுதும் கோல் — கருவி
    படிக்கும் மாணவன் — வினைமுதல்.
    உண்ணும் உணவு — வினை ( இவை ஆறும் ‘ செய்யும் ‘ என்ற வாய்பாடு)

    படித்த பள்ளி — நிலம்
    உண்ட சோறு — பொருள்
    வந்த நாள் — காலம்
    எய்த வேல் — கருவி
    ஆடிய கூத்தன் — வினைமுதல்.
    கூடிய கூட்டம் — வினை
    ( இவை ஆறும் ‘ செய்த ‘ என்ற வாய்பாடு)

    இடையியல் – 7

    பெயர்ச் சொற்களோடும் வினைச் சொற்களோடும் சார்ந்து நின்று, தனக்கென்று பொருளேதுமின்றி, அந்தந்தவிடத்துப் பொருள் தருவது ‘ இடைச்
    சொல் ‘ ஆகும்.

    சொற்களின் முன்னும் பின்னும் நிற்கும். இடையில் நிற்பதே பெரும்பான்மை என்றதால் ‘ இடைச்சொல்’
    என்றானது.

    இடைச்சொற்கள் தனித்தியங்கா. பெயர் வினைகளையே சார்ந்து, இடை என்ற இடத்தில் நிற்பதால் ‘ இடைச் சொல்’ என்கிறார் தெய்வச் சிலையார்.

    நன்னூல் உரையாசிரியர்களில் ஒருவரான சங்கர நமச் சிவாயர் ” பெயர்ச் சொல்லுமாகாது, வினைச்
    சொல்லுமாகாது, இரண்டின் வேறுமாகாமல், இடை நிற்பதால் ‘ இடைச்சொல் ‘ ஆயிற்று என்றார்.

    1
    தொல்காப்பியர் நூற்பா சொல்வதைப் பார்ப்போம்:

    ” இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற்
    றியலும் தமக்கியல் பிலவே ” ( 249)

    இ-ள்:
    இடைச்சொல் என்று சொல்லப்படுவன, பெயரொடும் வினையொடும் வழக்குப் பெற்றியலும். தாமாக நடக்கும் இயல்பில எ-று

    எ-டு:

    ” அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு ” ( வள்ளுவன், 1081)

    அப்பரடிகளின் விடந்தீர்த்த பதிகம் இது:,

    ” ஒன்று கொல்ஆம் அவர் சிந்தை உயர்வதை
    ஒன்று கொல்ஆம் உயரும் மதி சூடுவர்
    ஒன்று கொல்ஆம் இடுவெண் தலை கையது
    ஒன்று கொல்ஆம் அவர் ஊர்வது தானே ..” ( தொடர்ந்து 9 பாடல்களிலும் 36 தடவைகள் ‘ கொல் ‘ என்ற இடைச்சொல் வருவது காண்க. இவ்விடம் ஐயப் பொருளில் வந்தது)

    2
    மேலும் பல இடைச் சொற்களைக் குறித்துள்ளார். இவற்றை நூற்பாவை மனங்கொண்டு உணர்ந்து கொள்க!

    மன் இல் கொன் உம் ஓ. ஏ மற்று எற்று மன்ற எல் ஆர் குரை மா இரும் சின் அம்ம ஆங்க யா கா ஆக ஆகல் ஔ எனா என்றா எனப் பலவாம்.

    3
    ‘ உம் ‘ என்ற இடைச்சொல் அமையும் விதம்.

    ” எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை
    முற்றே எண்ணே தெரிநிலை யாக்கமென்று
    அப்பா லெட்டே உம்மைச் சொல்லே ” ( 255)

    இ-ள்:

    உம் என்ற இடைச்சொல் எட்டு வகை எ-று

    1 எச்சவும்மை 2. சிறப்பும்மை
    3 ஐயவும்மை 4 எதிர்மறை
    உம்மை 5 முற்றும்மை
    6 எண்ணும்மை 7 தெரிநிலையும்மை
    8 ஆக்கவும்மை

    எ-டு:

    இலக்குவனும் வந்தான் – எச்சவும்மை

    கற்றோரும் ஏத்தும் கலி — சிறப்பும்மை

    இன்றேனும் நாளையேனும் தருவான் —
    ஐயவும்மை

    வாசன் செய்வதற்கும் உரியன் — எதிர்மறையும்மை

    பாண்டவர் ஐவரும் வந்தனர் — முற்றும்மை

    நிலமும் நீரும் தீயும் வளியும் வெளியும் எனப் பூதங்கள் ஐந்து — எண்ணும்மை

    அவளும் அல்லள் இவளும் அல்லள் — தெரிநிலையும்மை

    மெலியவன் வலியவனும் ஆனான் — ஆக்கவும்மை

    4
    ஓ என்ற இடைச்
    சொல்லின் பயன்பாடு:

    ” பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை
    தெரிநிலைக் கிளவி
    சிறப்பொடு தொகைஇ
    இருமூன் றென்ப ஓகாரம்மே ” ( 256)

    இ-ள்:

    பிரிநிலை, வினா, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலை, சிறப்பு ஆகிய பொருளில் வரும் ஓகார இடைச்சொல் ஆறு வகைத்தாம் எ-று

    எ-டு:
    கோவலனோ கொண்டான்? — பிரிநிலை ஓகாரம்

    நாதன் உண்டானோ? வினா ஓகாரம்

    அவனோ சொற் கேட்பான்? — எதிர்மறை ஓகாரம்

    வேலை செய்யவோ வந்தாய்? — ஒழியிசை ஓகாரம்

    உன் சிந்தை நன்றோ தீதோ? அல்ல — தெரிநிலை ஓகாரம்

    ஓ ஒ கம்பன் கல்வியிற் பெரியன் — சிறப்பு ஓகாரம்

    கம்பன் தனிப்பாடல் ஒன்று :

    ” மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ
    உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்? — என்னை
    விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
    குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு “

    — இவ் வகுப்பு நிறைவு —

  • Class 26

    இலக்கண வகுப்பு – 26
    தொல்: சொல்: வினையியல் – 6 ( தொடர்ச்சி)

    சென்ற வகுப்பில் உயர்திணைப் படர்க்கை கற்றோம். இனி அஃறிணைப் பன்மை, படர்க்கையில் வருமாறு காண்போம்.

    1
    ” அஆ வ என வரூஉம் இறுதி, அப்பான் மூன்றே
    பலவற்றுப் படர்க்கை ” ( 216)

    இ-ள்:

    அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்றும் அஃறிணைப் பன்மைப் படர்க்கையாம் எ-று

    எ-டு:
    தொக்கன, தொக்க, உண்டன, உண்ட, வந்தன,
    வந்த, சென்றன, சென்ற போன்றன அஃறிணை வினைகளாகவும், அகரவீறு கொண்டு, படர்க்கைப் பன்மையாகவும் வந்தன காண்க.

    கோயில் திருவகவலில் பட்டினத்தார் பாடலைக் கவனியுங்கள்:

    “பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
    தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
    பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
    உணர்ந்தன மறக்கும்மறந்தன உணரும்
    புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் “

    ஆவீறு —
    உண்ணாநின்றன
    பேசாநின்றன
    வவீறு —
    சேர்ந்து வருவ, கண்டு வருவ, விரைந்து செல்வ.

    2
    இனி ஒருமை வினை முற்று எவ்வாறு அமையும்?
    ” ஒன்றன் படர்க்கை தறட
    ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும் ” ( 217)
    இ-ள்:
    ஒன்றனை உணர்த்தும் படர்க்கை வினையாவது தறட என்பனவற்றை ஊர்ந்து நின்ற குற்றியலுகரத்தை ஈறாகவுடைய சொல்லாம் எ-று
    த – து ற- று ட- டு — இவை குற்றியலுகர இறுதிகள்.

    எ-டு:

    ஆமை புக்கது. சேவல் கூவிற்று. விறகுக்குண்டு
    கட்டு.

    தகரவுகரம் மூன்று காலத்தும், றகரவுகரம் இறந்த காலத்தும், டகரவுகரம் மூன்று காலத்திற்குமுரியன.

    3
    இனி ‘ வினையெஞ்சு கிளவி’ ஈண்டு உரைக்கிறார்.

    ” செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
    செயியர் செய்யிய செயின்செயச் செயற்கென
    அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி ” (228)

    இ-ள்:

    இங்கு குறிப்பிடப்பட்டன வினையெச்சப் பாகுபாடுகள் அல்லது வாய்பாடுகள் என உரையாசிரியர் குறிப்பர்.

    அவை:

    நக்கு உண்டு வந்து சென்று எனவும், எஞ்சி ஓடி எனவும், ஆய் போய் எனவும் வரும்.

    எ-டு:

    நக்குச் சுவைத்தான்.
    உண்டு களித்தான்
    வந்து அடைந்தான்
    சென்று சேர்ந்தான்

    இவ் வொன்பதில் உரிஞ் என்றதுமடங்கும். மேலும் சினைஇ, உரைஇ, இரீஇ, உடீஇ, பராஅய், தூஉய், தாஅய் போன்ற அளபெடைகளும், ஆகி, போகி, மலர்த்தி, ஆற்றி என்ற குற்றுகரவீறாய் வருவனவும் வினையெஞ்சு கிளவிகளாம்.

    இவ்வெஞ்சு கிளவிகளைக் கொண்டே மாணிக்கவாசக சுவாமிகள் பாடுகிறார்:

    ” வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி
    யானெனது என்றவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி
    வாழ்த்துவனே ” (திருவாசகம்)

    4
    இனி ‘ பெயரெஞ்சு கிளவி’ பற்றிக் கூறுகிறார்.

    ” நிலனும் பொருளும் காலமும் கருவியும்
    வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கு மோரன்ன உரிமைய
    செய்யும் செய்த என்னுஞ் சொல்லே ” ( 234)

    இ-ள்:

    செய்யும், செய்த எனும் சொற்கள், தொழில் முதனிலை எட்டனுள் ‘ இன்னதற்கு இது பயனாக’ என்னும் இரண்டு ஒழித்து, ஏனை ஆறு பொருட்கும் ஒத்த உரிமைய எ-று

    எ-டு:

    வாழும் இல், கற்கும் நூல், துயிலும் காலம், வளையும் கோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமூண்
    என ஆறும் வந்தன. இவை ‘ செய்யும் ‘ எனும் வாய்பாடு கொண்ட பெயரெஞ்சு கிளவிகள். இவை வினைத் தொகைகள் எனவுமறிக.

    புகுந்த வீடு, உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போன போக்கன் என ஆறும் ‘ செய்த ‘ எனும் வாய்பாடு கொண்ட பெயரெச்சங்களாம்.

    இவ்வாறே ‘ உம்’ எனும் ஈறு பெற்று, செய்யும் எனும் வாய்பாட்டில் எதிர்காலம் குறித்து வரும்.
    எ-டு:
    நாளை வரும் விடியல்

    5

    இனி ‘ காலம் மயங்கு பொருள் ‘ பற்றி உரைக்கிறார்.

    ” இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்கு மொழிக் கிளவி ” (247)

    இ-ள்:

    இறப்பும் எதிர்வுமாகிய இரண்டு காலமும் மயங்கு
    மொழிப் பொருளாக வரும் எ-று

    எ-டு:

    ” இவர் பண்டு இப் பொழிலகத்து வந்து விளையாடுவர். நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான் பின் ( எனின்), நீ என் செய்குவை ” என்பது ஓர் பண்டைய இலக்கிய உரையாடல்.

    இங்கு, இறப்பும் எதிர்வும் மயங்கி வந்தமை காண்க.
    இது ‘ மயங்குமொழிக் கிளவி ‘ என்கிறார் தொல்காப்பியர்.

    இதனைக் ‘ கால வழுவமைதி ‘ எனக் கொள்ளல் உசிதமாகும்.

    — இவ் வகுப்பு ( வினையியல்) நிறைவு —

  • Class 25

    இலக்கண வகுப்பு – 25

    தொல்:சொல்: வினையியல், இயல் – 6, 13-05-2026

    பெயரை விளக்கி வந்த தொல்காப்பியர், இப்போது ‘வினை’ பற்றி விளக்கத் தொடங்குகிறார். இவ் வினையியலில், வினைச் சொற்களின் இலக்கணம், காலம், திணை, பால், தோற்றம் என்பன விளக்கப்படுகின்றன.

    இவ் வினையியலில் மேலும் விரிவாக இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், குறிப்பு வினை, உயர்திணை அஃறிணைக்கான வினைச் சொற்கள், வினையெச்சங்கள் குறித்துப் பேசப் படுகின்றன. இதில் 51 நூற்பாக்களுள.

    1
    தலைச் சூத்திரத்தே வினைச் சொல்லின் பொதுவியல்பு என்ன வென்றும், வினை இன்னது என்றும் விளக்கப்படுகிறது.

    ” வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
    நினையுங் காலைக் காலமொடு தோன்றும் “
    (1-198)

    இ-ள்:

    வினையென்று சொல்லப்
    படுவது வேற்றுமையோடு பொருந்த மாட்டா. ஆராயுங் காலை, காலத்தொடு புலப்படும் எ-று

    இங்கு ‘வேற்றுமை’ என்றது உருபுகளைச் சுட்டின.

    எ-டு:

    ‘ வெள்ளையன் உண்டான் என வேற்றுமை கொள்ளாது காலத்தொடு வந்தமை காண்க. இதனையே மூன்று காலத்திற்கும் காண்க;

    ” வெள்ளையன் உண்கிறான் ‘ – நிகழ்காலம்.

    ‘ வெள்ளையன் உண்பான் ‘ — எதிர்காலம்.

    3
    இப்போது அம் மூன்று காலங்களும் எவை எனக் காட்டுகிறார்.

    ” இறப்பி னிகழ்வின் எதிர்வின் என்றா
    அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும்
    மெய்ந்நிலை யுடைய தோன்றலாறே ” ( 3-200)

    இ-ள்:

    இறப்பும், நிகழ்வும், எதிர்வும் என்று சொல்லப்படும் அம் மூன்று காலமும் குறிப்பு வினையொடும் பொருந்தும் மெய்ந்நிலைமையை உடைய, வினைச் சொல்லானவை தோன்று நெறிக்கண் எ-று

    எனவே காலங்கள் வெளிப்படத் தோன்றுவன மூன்று என்பதும், வெளிப்படத் தோன்றாதது ஒன்று என்ற குறிப்புவினை என்பதும்
    பெறப்பட்டன.

    எ-டு:

    உண்டான் — இறப்பு

    உண்கிறான் — நிகழ்வு
    உண்ணாநின்றான் – நிகழ்வு.

    உண்பான் — எதிர்வு

    ( நிகழ்கால இடை நிலைகள் : ஆநின்று, கின்று, கிறு.)

    ( இறந்தகால இடைநிலைகள் : த் ட் ற் ன்)

    ( எதிர்கால இடைநிலைகள் :
    ப் வ்)

    வெள்ளையன், கரியன் போன்றன குறிப்பு வினைகளாம். இவை காலமொடு தோன்றின்
    பண்டு வெள்ளையன்,
    இன்று கரியன், நாளை கரியன் என வரும்

    முக்காலங்களின் வரைவிலக்கணம் :

    இறப்பு – தொழிலொன்றின் கழிவு, சென்று முடிதல்

    நிகழ்வு – தொழிலொன்று தொடங்கி அது முற்றுப் பெறாது நடந்து கொண்டிருக்கும் நிலை

    எதிர்வு – தொழிலொன்று புதிதாகப் பிறவாத நிலை,

    இங்கு தொழில் என்றது வினை, செயல், இயங்கு
    தன்மை எனப் பொருளாம்.

    4
    இனி, வினைச் சொற்களின் வகைகள்.

    ” குறிப்பினும் வினையிலும் நெறிப்படத் தோன்றிக்
    காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
    உயர்திணைக் குரிமையும்
    அஃறிணைக் குரிமையும்
    ஆயிரு திணைக்குமோர் அன்ன உரிமையும்
    அம்மூ வுருபின தோன்ற லாறே ” ( 4-201)

    இ-ள்:

    குறிப்புப் பொருண்மைக் கண்ணும், தொழிற் பொருண்மைக்கண்ணும் தோன்றி, காலத்தொடு வரும் எல்லா வினைச் சொல்லும், உயர்திணைக்கு உரியன, அஃறிணைக்கு உரியன, இரு திணைக்கும் ஒப்ப உரியன என்று தோன்றும் நெறிக்கண் மூன்று கூற்றனவாம் எ-று

    இங்கு மூவினைகளையுமே ‘ மூன்று கூற்றன ‘ என்றார்.

    1. உயர்திணைக்குரியது —
      முருகன் வந்தான். இது தெரிநிலை வினை

    முருகன், வள்ளி — இவை குறிப்பு வினை

    2
    அஃறிணைக்குரியது —
    மாமரம் பூத்தது. இது தெரிநிலை வினை

    மாமரம் – குறிப்பு வினை

    3
    இருதிணைக்குமுரியது —
    வந்தனை, தந்தனை. இவை தெரிநிலை விரவுவினை ( முக்கால விரவு வினை)

    எ-டு:
    கண்ணன் கனவில் வந்தனை. இது உயர்திணை
    இலக்குமி செல்வம் தந்தனை. இது உயர்திணை. இவை முக்கால விரவுவினை.

    5
    மேலும், படர்க்கை இடத்திலே ஒருமை வினைமுற்று வருமாறும், நான்கு ஈறுகள் முக்காலத்திற்கும் வருமாறும் உரைக்கிறார்.

    ” அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும்
    ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே ” (8-205)

    இ-ள்:

    அன் ஆன் அள் ஆள் எனும் ஈற்றையுடைய நான்கு சொல்லும், உயர்திணை ஒருமை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் எ-று.

    இந் நான்கீறும் மூன்று காலமும் பற்றி வரும்.

    எ-டு:
    நாதன் உணவு உண்டனன்
    ( இறப்பு ) அன் வந்தது.
    நாதன் உணவு உண்கிறான் ( நிகழ்வு) ஆன் வந்தது
    நாதன் உணவு உண்பான்
    ( எதிர்வு) ஆன் வந்தது
    செல்வி உணவு உண்டனள்
    செல்வி உணவு உண்கிறாள்
    செல்வி உணவு உண்பாள்
    ( இவை இன்றைய வழக்கு. ஆயின்
    உண்டனன், உண்ணாநின்றனன்,
    உண்பன் என அன் முக்காலமும் வந்தமை முந்தைய வழக்கு எனத் தெளிக)

    6
    இதேபோல படர்க்கைப் பன்மை வினைமுற்றுக்கு
    அர், ஆர் ப என்ற மூவீறும் நின்று முக்காலமும் பொருள் தரும்.

    உண்டனர்
    உண்ணாநின்றனர்
    உண்பர்

    உண்டார்
    உண்ணாநின்றார்
    உண்பார்.

    • இவ்வகுப்பு நிறைவு –

    ஐயம் தெளிதல்

    ஐயா,
    இப் பகுதியை ‘ஐயம் தெளிதல் ‘ பகுதியில் போட முடியுமா?

    நூற்பா 162 – உயர் திணைப் பெயர்கள் 15.

    நூற்பா 167 – அஃறிணைப் பெயர்கள் 15.

    நூற்பா 168 – அஃறிணைப்
    பாலுணர்த்தும் பெயர் 9.

    நூற்பா 175 – விரவுப் பெயர்களின் விரி பற்றிக்
    கூறுகிறது:

    ” அவற்றுள்,
    நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
    நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே
    முறைப்பெயர்க் கிளவி
    இரண்டா கும்மே ஏனைப்
    பெயரே தத்தம் மரபின “

    இதன்படி 4+4+4+2 = 14
    ஏனைப் பெயர்கள் தத்தமக்கான இலக்கண மரபுடையன என்றார்.

    வகுப்பு 25 நிறைவு

  • Class 24

    https://www.tholkappiyam.org
    இலக்கண வகுப்பு – 24

    தொல்:சொல்; ‘ பெயரியல்’ தொடர்ச்சி:

    சென்ற வகுப்பில் ‘ பால் விளங்க நின்ற உயர்திணைப் பெயர்கள் 15 என்று பார்த்தோம். அடுத்து இருதிணைப் பெயர்களில் ‘ அஃறிணைப் பெயர்கள் ‘ பற்றி நோக்குவோம். அவையும் 15 என்றே தொல்காப்பியர் வகுத்துள்ளார்.

    1
    ” அது இது உதுவென வரூஉம் பெயரும்
    அவை முதலாகிய ஆஃதப் பெயரும்
    அவையிவை உவையென வரூஉம் பெயரும்
    அவை முதலாகிய வகரப் பெயரும்
    யாது யா யாவை என்னும் பெயரும்
    ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்
    பாலறி வந்த அஃறிணைப் பெயரே ” ( 167-13)

    இ-ள்:

    அது இது உது; அஃது இஃது உஃது ; அவை இவை உவை; அவ் இவ் உவ் என்ற வகரமும், யாது யா யாவை என்ற வினாப்
    பெயரும் ஆக பதினைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயராம் எ-று

    “அவன் அவள் அது வெனும் அவை மூவினை மையில் தோற்றிய திதியே ஒடுங்கி மனத்துளதாம்
    அந்தமாதி என்மனார் புலவர்”
    ( சிவஞானபோதம், 1 மெய்கண்டதேவர்)

    2
    அப் பதினைந்தோடு மேலும் பலவுள என்கிறார்.

    “பல்ல பலசில என்னும் பெயரும்
    உள்ள வில்ல என்னும் பெயரும்
    வினைப் பெயர்க் கிளவியும்
    பண்பு கொள் பெயரும்
    இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
    ஒப்பி னாகிய பெயர் நிலை உளப்பட
    அப்பா லொன்பதும் அவற்றோ ரன்ன ” ( 168-14)

    இ-ள்:

    இங்கு கூறப்பட்ட 9 பெயர்களும் அஃறிணைப் பாலுணர நிற்கும் எ-று

    பல்ல பல சில உள்ள இல்ல = 5

    வருவது செல்வது போன்ற வினைப் பெயர்க
    ளும்,

    கரியது செய்யது போன்ற பண்புகொள் பெயர்களும்,

    ஒன்று பத்து நூறு என்ற எண்பற்றி குறிக்கும் பெயர்களும்,

    பொன்னன்னது பொன்னல்லவை எனவரும் ஒப்புப் பெயர்களும்,

    ஆக ஒன்பதும் அஃறிணைப் பாலனவாம்.

    3
    இவ்வண்ணம் சொல்லப்பட்ட அஃறிணைச் சொற்கள் ‘ இயற்பெயர் ‘ ஆகும் என்றும்,

    ‘கள் ‘ எனுமீறு விகுதியாகும் காலை ஏற்படும் மாற்றம் பற்றியும் இங்குரைக்கிறார்.

    ” கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
    கொள்வழி யுடைய பலவறி சொற்கே ” ( 169-15)

    இ-ள்:

    கள்ளென்னும் ஈற்றொடு பொருந்தும் அஃறிணை இயற் பெயர், கள் ஈற்றொடு பொருந்து மிடத்து ‘ பலவறி சொல்லாம்’ எ-று

    எ-டு:

    ஆ நாய் குதிரை கழுதை தெங்கு பலா மலை கடல் என்பன அஃறிணை இயற்
    பெயர்களாம். ஒருமைக்கும் பன்மைக்கும் இயல்பாய் நிற்றலால் ‘ இயற்பெயர்’ என்றானது.
    இவை ஒவ்வொன்றின் ஈற்றிலும் ‘ கள் ‘ என்ற விகுதி சேர்க்க, அவை பலவறி ( பன்மை) சொல்லாம் எனத் தெளிக!

    ஆயினும் ஒரு புறநடையாக அஃறிணைக்கு வேறான ஒரு பிரமாணம் சொல்லப்
    பட்டுள்ளது.

    ” தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர்
    ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே ” ( 171-17)

    இ-ள்:
    கள்ளொடு சிவணாத அஃறிணை இயற்பெயர், ஒருமையும் பன்மையும் அதற்கேற்ற வினையால் அறியப்படும் எ-று

    எ-டு:
    ஆ வந்தது — ஒருமை
    ஆ வந்தன — பன்மை
    காளை வந்தது — ஒருமை
    காளை வந்தன — பன்மை

    மணிவாசகர் ” கூவின பூங்குயில் கூவின கோழி..
    இயம்பின சங்கம் ஓவின தாரை ” என்றமையை ஒப்பிட்டு நோக்குக.

    4
    அடுத்து, இரு திணைக்கும் சென்று விரவிப் பொருள் தருவன
    ‘ விரவுப் பெயர்கள் ‘ என்று முன்னர் கற்றோம். ஏனைய விரவுப் பெயர்களை இங்கு குறிக்கிறார்.

    ” இயற்பெயர் சினைப் பெயர் சினைமுதற் பெயரே
    முறைப் பெயர்க் கிளவி
    தாமே தானே எல்லா நீயிர்
    நீயெனக் கிளந்து
    சொல்லிய அல்ல பிறவுமா அங்கு
    அன்னவை தோன்றின்
    அவற்றொடுங் கொளலே “
    ( 174-20)

    இ-ள்:
    இயற்பெயர் முதலாக நீ என்பதீறாகச் சொல்லப்பட்டன அல்லாத அன்ன பிறவும் ஆண்டு வருமாயின் சொல்லப் பட்டவற்றோடு கூட்டிக் கொள்க எ-று

    எ-டு:
    இயற்பெயர் — கந்தன், காந்தன், சிவந்தி, பார்வதி

    சினைப்பெயர்– நெடுங்கண்ணன், நீள்விழியாள்

    சினைமுதற் பெயர் — சீழ்த்தலைச் சாத்தனார், வாள்விழி வள்ளி

    முறைப்பெயர் — தாய், தந்தை, அண்ணா, அக்கா

    தம்மையுணர்த்தும் பெயர்– தாம், தான், எல்லா, நீயிர், நீ

    இயற்பெயரானது இரண்டு வகையாய்ப் பொருள் தரும்.

    1 இடுகுறிப்பெயர் — மரம், நிலம், வளி போன்றன

    2 காரணப்பெயர் — வேலவன், ஓசைகொடுத்த நாயகி, பிறைசூடி.

    5 தொல்காப்பியர் குறித்த இயற்பெயர்களின் தொகை 16 என விரிவு செய்யப்பட்டுள்ளது:

    பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் ஒருமை இயற் பெயர் பன்மை இயற்பெயர் —4

    பெண்மைச் சினைப் பெயர், ஆண்மைச் சினைப்பெயர், பன்மைச் சினைப்பெயர், ஒருமைச் சினைப்பெயர் — 4

    பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர், ஆண்மை சுட்டிய சினை
    முதற்பெயர், பன்மை சுட்டிய சினைமுதற்பெயர், ஒருமை சுட்டிய சினை முதற் பெயர் — 4

    பெண்மை முறைப்பெயர், ஆண்மை முறைப்பெயர் — 2

    ஆக இயற்பெயரின் விரிவு 14 எனவுணர்க.

    • இவ்வகுப்பு நிறைவு —
  • Class 23

    இலக்கண வகுப்பு – 23, 29-4-2026
    தொல்:சொல்: இயல் – 5 ‘ பெயரியல் ‘

    பெயர், வினை, இடை, உரி ஆகிய நால்வகைச் சொற்களையும் பொதுவகையானும், பொது இலக்கணமாதல் ஒப்புவமையானும், வேற்றுமைப் பெயரோடு இயைபுடைமையானும், பெயரிலக்கணத்திற்கும் பொதுவிலக்கணத்திற்கும், இடை வேற்றுமை இலக்கணமுணர்த்தி, இனிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லும் உணர்த்துவான் எடுத்துக் கொண்டு, இவ்வோத்தான் அவற்றின் முதற் கண்ணதாகிய ‘ பெயரிலக்கணம் ‘ உணர்த்துகிறார். அதனான் இது ‘ பெயரியல்’ என்னும் பெயர்த்தாயிற்று.

    1
    ” எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ” ( 1-155)

    இ-ள்:

    பெயர், வினை, இடை, உரி ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறித்து வருவனவே, பொருள் குறியாது நில்லா எ-று

    தமிழ்ச் சொல் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால், அதனுள்ளே ஒரு பொருளுமிருக்கும். இவ்விலக்கணப் படி, சொல்லும், அது எடுத்துக் கொண்ட பொருளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் இணைந்தே காணப்படும். இவ்விலக்கண உண்மையை அபிராமிப் பட்டர் பதிவு செய்கிறார்.

    ” சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன்
    புல்லும் பரிமளப் பூங்கொடியே ….”

    இதனை ஒத்தபடிக்கு, கவி காளிதாசனும் தனது இரகு
    வம்சத்திலே பாடியுள்ளார்:

    ” வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப்
    ப்ரதிபத்தயே//
    ஜகத ஃபிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ “

    ( இ-ள்: சொல்லும் பொருளுமென இணைந்த இத் தொல்லுலகின் தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரரை; சொல்லையும் பொருளையும் அறிந்திட வேண்டிப் பிரார்த்திக்கிறேன்)

    2
    பொருளை உணர்த்துவதே சொல் என்றவர், அச் சொல் இரண்டு வகையாக இயங்கும் என்கிறார்,

    ” பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர் ” ( 156)

    இ-ள்:

    தன்னின் வேறான பொருளை அறியப்படுத்துதலும், பொருளறியப்படாமல் அச் சொல் தானே அறியப்படுதலும் ஆகிய இரண்டும் சொல்லே எ-று

    எ-டு:

    அவன் வந்தான், அவள் வந்தாள் போன்றன தன்னின் வேறான பொருளை உணர்த்தின.

    அல்லாமல் ‘ அவன் ‘ என்ற சொல் தன்னையே அறியப்படுத்தும் சொல்லாக வரும், இப்படி,

    அவன் – பெயர்ச்சுட்டு, படர்க்கை, ஆண்பால், உயர்திணை,
    வந்தான் – ஆண்பால், இறந்த காலம், வினை முற்று.

    ஆக ஒரு சொல்லானது தானும், பிறிதுமென இரண்டு வகையாமெனத் தெளிக!

    3
    இனி, சொற்களின் பாகுபாடு பற்றி இங்கு உணர்த்துகிறார்.

    ” சொல்லெனப் படுவ பெயரே வினையென் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே ” ( 158)

    இ-ள்:

    சொல்லாவன பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லுமென இரண்டென்று சொல்வர் அறிந்தோர் எ-று

    4
    அடுத்து, மேலும் இருவகைச் சொற்களைக் குறித்து இந்நூற்பா உரைக்கிறது.

    ” இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்று மென்ப ” ( 159)

    இ-ள்:

    இடைச் சொல்லும், உரிச் சொல்லும் பெயரையும், வினையையும் சார்ந்து தோன்றும் எ – று

    5
    இனி, பெயர்ச் சொல்லின் இலக்கணம் யாது என இங்கு விளக்குகிறார்.

    ” அவற்றுள்; பெயரெனப் படுபவை தெரியுங் காலை, உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்குமோர் அன்ன. உரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே “
    ( 160)

    இ-ள்:

    மேலேயுரைத்த நான்கினுள், பெயரென்று சொல்லப்படுவன உயர்திணைக்கு உரியனவாய் வருவனவும், அஃறிணைக்கு உரியனவாய் வருவனவும், இரண்டு திணைக்கும் ஒத்த உரிமையாய் வருவனவும் என மூன்று வேறுபட்டனவாம் எ-று

    எ-டு:

    மன்னன் – உயர்திணைப் பெயர்.
    யானை – அஃறிணைப் பெயர்.
    தாய் – இருதிணைக்கும் உரித்தாகி வந்த விரவுப் பெயர்.

    6
    அடுத்து இரு திணைகளாகப் பிரிந்த ஐம்பால்களையும் பெயர்ச் சொல் உணர்த்தும் என்றும், அவை வழக்கில் எவ்வாறு வரும் என்றும் தெளிவுறுத்துகிறார்.

    ” இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர்வயி னான ” (161)

    இ-ள்:

    இரண்டு திணைகளாய்ப் பிரிந்த ஐம்பால், கிளவியாதற்கும் பெயருள் உரியன உரியவாம் எ-று

    அவன் — உயர்திணை, ஆண்பால்

    அவள் — உயர்திணை, பெண்பால்

    அவர் — உயர்திணை, பலர்பால்

    அது — அஃறிணை, ஒன்றன் பால்

    அவை — அஃறிணை, பலவின் பால்

    ஆண் என்றதை ஆடூஉ என்றும், பெண் என்றதை மகடூஉ என்றும் தொல்காப்பியர் குறிப்பர்.

    மேலும், னகரவீறு ஆண்பாற்கும், ளகரவீறு பெண்பாற்கும் உரியனவாம்.

    எ-டு:

    நஞ்சுண்டவன் சாவான்,
    நஞ்சுண்டவள் சாவாள்,
    நஞ்சுண்டது சாகும்,
    நஞ்சுண்டார்/வர் சாவார்/சாவர்,
    நஞ்சுண்டன சாம்
    என்று உரியவாறு வந்தமை காண்க!

    7
    மேலும் பால்விளங்க நிற்கும் உயர்திணைப் பெயர்கள் பதினைந்து வகைத்தன என்று எண்ணிக்கை உரைக்கிறார்.

    ” அவ்வழி, அவ னிவ னுவனென வரூஉம் பெயரும்
    அவ ளிவ ளுவளென வரூஉம் பெயரும்
    அவ ரிவ ருவரென வரூஉம் பெயரும்
    யான் யாம் நாம் என வரூஉம் பெயரும்
    யாவன் யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றொடு
    அப் பதினைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே ” ( 162)

    இ-ள்:

    மூவகைப்பட்ட பெயருள், அவன் என்பது முதலாக, யாவர் என்றதீறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பால் விளங்க நிற்கும் உயர்திணைப் பெயர்களாம் எ -று
    ( மூன்று பெயர் = ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர், விரவுப்பெயர் என்பன)

    • இவ்வகுப்பு நிறைவு –
  • Class 22

    இலக்கண வகுப்பு – 22
    தொல்: சொல்: இயல் – 4

    ‘விளிமரபு ‘

    ‘ விளி ‘ என்றது விளித்தலைக் குறிக்கும். விளித்தல் அழைத்தல் எனப் பொருள் கோடலாம். ‘மரபு’ என்றது தமிழ் கூறும் நல்லுலகில் ஆதிமுதல் நிலவி வந்த பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் குறித்து நின்றது.

    இதுவரை 7 வேற்றுமைகளையும், அவை கொண்ட உருபுகளையும் விளக்கி வந்த தொல்காப்பியர், வேற்றுயியலிலும், வேற்றுமை மயங்கியலிலும் கூறாது விட்ட எட்டாம் வேற்றுமை இங்கு தனியே ஒரு இயலிலே விளக்குகிறார். இதில் 37 நூற்பாக்கள் மட்டுமே உள.//

    1
    எட்டாம் வேற்றுமைக்கும், முதலாம் வேற்றுமை போல, உருபு கிடையாது.
    இவ் விளி வேற்றுமை இரண்டு வகை :

    அண்மை விளி, சேய்மை விளி.

    ” விளியெனப் படுவ கொள்ளும் பெயரொடு
    தெளியத் தொன்றும் இயற்கைய வென்ப ” ( 118)

    இ-ள்:

    விளியென்று சொல்லப்படுவன, தம்மை
    ஏற்கும் பெயரோடு விளங்கத் தோன்றும் இயல்புடையவென்று சொல்வர் ஆசிரியர் எ-று //

    விளி வேற்றுமை பெயராலே விளங்கும். ஈறு திரிதலும், ஈற்றயல் நீடலும், பிறிது வந்தடைதலும் இயல்பாம் என்றார். வெற்றே விளிக்காமல், குறித்து விளிப்பதே விளி என்றறிக.

    ” கொள்ளும் பெயர் ” என்று குறித்ததனால், ‘ கொள்ளாப் பெயரும்’ உண்டென்று கொள்க.

    2
    இங்கு உயர்திணைப் பெயர்கள் விளியேற்கும் உயிரீறுகள் எவை எனக் குறிக்கிறார்.

    ” அவைதாம்;
    இ உ ஐ ஓ வென்னுமிறுதி
    அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்
    மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே “
    (120)

    இ-ள்:

    பெயர் தாம் இ உ ஐ ஓ எனும் இறுதியை உடைய நான்கு பெயரும் உயர்திணைப் பெயருள் விளி கொள்ளும் பெயர் எ-று//

    “அவற்றுள் இ ஈயாகும், ஐ ஆய் ஆகும் ” என்பது சூத்திரம் 121 உரைப்பதாம்.

    எ-டு:

    நம்பி – நம்பீ ( இங்கு இ ஈயானது)

    நங்கை – நங்காய் ( இங்கு ஐ ஆய் ஆனது)

    மேலும் ஈறு திரிந்தமையும், ஈற்றயல் நீண்டமையும், பிறிது வந்ததும் கண்டு கொள்க.

    மேலும்
    ” ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் ” ( 122)

    இ-ள்:

    ஓ என்ற உயிரும், உ என்ற உயிரும் விளிக்கும் போது
    ஏகாரத்துடன் இணையும் எ-று //

    எ-டு:

    கோ – கோவே ( இங்கு ஓ ஏயுடன் சிவணியது)

    வேந்து – வேந்தே ( இங்கு உ ஏயுடன் சிவணியது)

    ” …..ஏவல்கொளு மிந்த்ர லோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே!”

    ( வடிவோனே – ஓ ஈறு ஏயொடு சிவணியது)

    ” …..பேதை பயில் கின்ற ஆறிரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே “

    ( வாழ்வே – உ ஈறு ஏயொடு சிவணியது)

    மேலும் உகரவீறு ஏயொடு சிவணுகின்ற விளி வேற்றுமையை திருவிசைப்பாவிலே (திருமாளிகைத்தேவரருளியது) காணலாம் :

    ” ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
    தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே ……” //

    3
    இவ் விளி வேற்றுமை அளபெடை கொள்ளும் போது எவ்வாறியலும்?

    ” அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய வென்ப ” (125)

    இ-ள்:

    அளபெடை தன்னியல்பு மாத்திரையின் மிகுந்து, நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் இகரவீற்றுப் பெயர், இ ஈ ஆகாது இயல்பாய் விளி ஏற்கும் செய்கையை உடையவாம் எ-று

    எ-டு:
    தோழீஇ — தோழீஇஇ, தோழீஇஇஇ. //

    4
    இவ்வாறு வருகின்ற விளிகள் ‘ சேய்மை விளி’ கள் ஆகும். ஆயின் அண்மை விளி இயல்பாக நின்றிலங்கும்.

    ” அண்மைச் சொல்லே இயற்கை யாகும் ” ( 127)

    எ-டு:

    நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி.
    (இங்கு இ உ ஐ ஓ நான்கும் இயல்பாய் வந்தமை காண்க. //

    5
    மேலும் சில விளிமரபுகளைச் சுருக்கி நோக்குவோம் :

    அன்னை – அன்னா
    அத்தை – அத்தா
    அன் ஈறு ஆவாகும் ( சோழன் – சோழா)

    அன் ஈறு அண்மை விளியில் அகரமாகும்.
    (தலைவன் – தலைவ, இறைவன் – இறைவ) //

    முறைப் பெயர் ஏகார விளியேற்கும்.
    ( மகன் – மகனே, மகள் -மகளே)

    தான், யான், யாவன், சுட்டு முதல்கள் என்பன விளியேலாப் பெயர்கள்.

    அர், ஆர் என்ற இரண்டும் ஈர் என்ற விளியேற்கும்.
    ( பார் – பாரீர், கூத்தர் – கூத்தீர், நல்லர் – நல்லீர்)

    புள்ளியீறும், உயிரீறுமாகிய அஃறிணைப் பெயரெல்லாம் விளி கொள்ளும் வேளை, ஏகாரம் பெறும்.
    ( மரம் – மரமே, அணில் – அணிலே, நரி – நரியே)

    — விளிமரபு நிறைவு —

  • Class 21

    இலக்கண வகுப்பு – 21

    தொல்:சொல்: வேற்றுமை மயங்கியல் – தொடர்ச்சி

    சென்ற வகுப்பில் ஐ, ஆன், இன் போன்ற சில வேற்றுமை உருபுகள் எவ்வாறு மயங்கின என்று ஓரளவு கற்றுக் கொண்டோம், இவ் வகுப்பில் மேலும் சில மயக்கங்களைப் பார்ப்போம்.

    1
    உடைமைப் பொருளில் வரும் ‘ அது ‘ என்ற ஆறாமுருபு, ‘கு’ வாகி வந்து மயங்குந் தன்மையை இந் நூற்பா விளக்குகிறது.

    ” அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகை வயின், அதுவென் உருபு கெடக் குகரம் வருமே “( 94)

    இ-ள்:
    ஆறாம் வேற்றுமைப் பொருள்மேல் வரும் உயர்திணைத் தொகைக்
    கண் உருபு விரிப்புழி, ‘அது’ வெனும் உருபு கெட, அதன் பொருட்கண் நான்காமுருபு வரும் எ-று

    எ-டு:
    ‘நம்பி மகள் வள்ளி’, இது உடைமைப் பொருளாதலின், அத் தொகையை விரிக்க ‘ நம்பியது மகள் ‘ எனவரும். அதனை ‘அது’ உருபுகெட ‘ நம்பிக்கு மகள் வள்ளி ‘ என விரியும். ஏனெனில் ‘அது’ அஃறிணைப் பால் வருமென்பதால், உயர்திணைக்கண் ‘கு’ உருபேற்கும் என்றதனாலாகும்.

    அஃறிணைக்கண்,
    பசுக்கன்று — பசுவினது கன்று.
    கிளிக்குஞ்சு — கிளியினது குஞ்சு என வந்தமை அஃறிணை உடைமைப் பொருளை உணர்த்திற்று.

    2

    பல உருபுகள் தொடர்ந்து அடுக்கி வந்தும் மயங்கும் என்பதை இது விளக்குகிறது:

    ” உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
    ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே “
    (102)

    எ-டு:
    தினையின் நுனிக்கண் கிளியைக் கண்டான். இவ்
    வாக்கியத்தில் 3 உருபுகள் அடுக்கி வந்தன.

    ” அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்” ( குறள், 543)

    3
    ” இறுதியும் இடையும் எல்லா வுருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் “

    இ-ள்:

    வேற்றுமைத் தொடர் இறுதிக்கண்ணும், அதனிடையிலும் ஆறு உருபுகளும் தத்தமக்கு ஓதிய பொருளில் நிற்கும்
    எ-று

    எ-டு:

    கடந்தான் நிலத்தை.
    வந்தாள் கணவனொடு.
    கொடுத்தான் ஏழைக்கு.
    வலியன் பீமனின்.
    ஆடை பெண்ணது.
    ( இவை இறுதியில் வந்தவை)

    பெண்ணினது சேலை.
    குன்றத்துக்கண் முருகன்.
    ( இவை இடையில் வந்தவை)

    4
    ஆகு பெயர்கள் பற்றி ஈண்டுரைப்பது யாவையெனக் காண்போம்.

    ஒன்றன் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராக வழங்கி வருவதும், அவ்வாறு ஒன்று மற்றொன்றுக்கு ஆகிவருவதும் ‘ ஆகு பெயர்’ எனப்படும்.

    ” முதலிற் கூறும் சினையறி கிளவியும்
    சினையிற் கூறும் முதலறி கிளவியும்
    பிறந்த வழிக் கூறலும்
    பண்பு கொள் பெயரும்
    இயன்றது மொழிதலும்
    இருபெய ரொட்டும்
    வினைமுத லுரைக்கும் கிளவியொடு தொகைஇ
    அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி ” ( 114)

    இ-ள்:

    (இவற்றின் பொருளை விரித்து, எடுத்துக் காட்டுகளைப் நோக்க, இந்
    நூற்பாவின் பொருள் விளங்கும்)

    எ-டு:


    1. முதலாகு பெயர் —
      முதற் பொருளின் பெயர் சினைப் பொருளுக்கு ஆகி வருவது இது:

    ‘ மல்லிகை மணம் வீசியது ‘
    இங்கு மல்லிகை முதற் பொருளாகிய மரம். பூ சினைப் பெயர். இது பொருளாகுபெயர் எனினும் ஒக்கும்.

    1. சினையாகு பெயர் —
      சினைப் பொருளின் பெயர், முதற் பொருளுக்கு ஆகி வருவது. ‘ வெற்றிலை நட்டான் ‘ – வெற்றிலை வெற்றிலைக் கொடிக்கு ஆகி வந்தது.
    2. இடவாகு பெயர் —
      ஓர் இடத்தின் பெயர், அங்குள்ள பொருளுக்கு ஆகி வருவது.

    ‘ உலகம் விழித்தது ‘

    இங்கு உலகம் என்றது அங்கு வாழும் மக்களுக்கு ஆகி வந்தது.

    1. பண்பாகு பெயர் —
      ஒரு பண்பின் பெயர் அப் பண்பையுடைய பொருளுக்கு ஆகி வருவது இது.

    ‘ மஞ்சள் பூசினாள் ‘

    இங்கு மஞ்சள் நிறம், மஞ்சள் கிழங்கிற்கு ஆகி வந்தது.

    1. காரணாகு பெயர் —
      ஒன்றுக்குக் காரணமாய் அமைந்த பொருள், அதனாலான காரியத்திற்கு ஆகி வருவது இது.

    ‘ சூரியன் சுட்டான் ‘

    சூரியனின் கதிர், சூரியனுக்கு ஆகி வந்தது.

    1. இருபெயரொட்டாகு பெயர் —
      இரு ஒத்த பொருட் பிற சொற்கள், ஒரு பொருளைக் குறிக்க ஆகி வருவது இது.

    ‘ சாரைப் பாம்பு ‘

    இங்கு சாரை, பாம்பு என்ற ஒத்த பொருள் இரு பெயர் ஒட்டி வந்து ஒரு பாம்பைக் குறித்தன.

    1. கருத்தாவாகு பெயர் —
      கருத்தாவான செய்தவனின் பெயர், அவனாற் செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவது இது.

    ‘ வள்ளுவன் படித்தேன் ‘
    ‘ சேக்கிழார் கற்றேன் ‘

    இங்கு வள்ளுவனும், சேக்கிழாரும் அவர்கள் செய்த நூல் என்ற பொருளுக்கு ஆகி வந்தது.

    • இவ் வகுப்பு நிறைவு –
  • Class 20

    இலக்கண வகுப்பு – 20
    தொல்:சொல்: வேற்றுமையியல் – தொடர்ச்சி :

    1
    இனி ‘ ஆறாம் வேற்றுமை உருபு – ‘ அது ‘ என்பதனை விளக்குகிறார்.

    ” ஆறா குவதே, அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
    அன்ன கிளவிக் கிழமைத்
    ததுவே ” ( 79)

    இ-ள்:
    ‘அது’ எனப் பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஆறாவதாம். ‘அது’ உடையதாய் நிற்குந் தன்னானும், பிறிதொன்றானும் ‘ இதனது இது ‘என்பது படநிற்கும் கிளவியில் தோன்றும் கிழமையைப் பொருளாகவுடைத்து எ-று

    இவ்வுருபு ‘கிழமைப் ( உடைமை) பொருளில் வருவதாம். அது தன்னான் வந்த ‘தற்கிழமை’ என்றும், பிறிதான் வந்த ‘பிறிதின் கிழமை’ என்றும் இருவகையாம்.

    ‘தன்’ என்றது தன்னோடு ஒற்றுமையுடைய பொருள் எனவும், ‘ பிறிது ‘ என்றது தன்னின் வேறாகிய பொருள் எனவும் தெளிக.

    தொல்காப்பியர் காலத்தே அது ஆது அ என்ற மூன்றும், உருபுகளாக வழங்கின. அது ஆது ஒருமைக்கும், அ பன்மைக்கும் வரும். ஆது இன்று வழக்கிலில்லை.

    எ-டு:
    முருகனது கை — தற்கிழமை – பிரிக்க முடியாதது

    மன்னனது படை — பிறிதின் கிழமை — பிரிக்கக் கூடுவது

    இன்றைய வழக்கில் ‘ உடைய ‘ என்ற சொல்லுருபும் வழக்கிலுள்ளது. சங்க காலத்தேயே தோன்றியது.

    7ஆம் நூற்றாண்டில் சம்பந்தரும் ” தோடு உடைய, காடுஉடைய, ஏடு உடைய, பீடு உடைய என்றார்.

    ” இடரினும் தளரினும் எனது உறு நோய்
    தொடரினும் உனது கழல்
    தொழுதெழுவேன்…..
    உனது இன்னருள் …”
    ( சம்பந்தப் பெருமான்)

    எனதுறு நோய் = பிறிதின் கிழமை
    உனகழல் = தற்கிழமை
    உனதின்னருள் = பிறிதின் கிழமை

    2
    ஏழாம் வேற்றுமை, உருபு:
    ‘ கண் ‘ ஆகும்.

    ” ஏழா குவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
    அனைவகைக் குறிப்பின்
    தோன்று மதுவே ” ( 81)

    கண் என்பது இடத்தைக் குறிக்கும். இடம் என்றது வினை நிகழும் இடத்தையாகும். இது இடம், நிலம், காலம் ஆகிய மூவகைக் குறிப்புப் பொருளிலும் வரும்வகை காண்க.

    எ-டு:
    போராளி களத்தின்கண் நின்றான். களம் =
    நிலப்பொருள்.

    சீதை மாடத்தின்கண் பந்தாடினாள். மாடம் = இடப்பொருள்.

    விடியற்கண் மணி ஒலித்தது. விடியல் = காலப் பொருள்.

    ( வேற்றுமையியல் நிறைய, வேற்றுமை மயங்கியல் ஆரம்பம்)

    வேற்றுமை மயங்கியல் – இயல் – 3

    ஒரு தொடர்வாக்கியத்தின் அல்லது ஒரு மொழியின் பொருள் அதன் இயல்பினால் தன்னிலை வேறுபடுவது ‘வேற்றுமை’ என்றும், அவை 8 வகைத்தன என்றும், அவற்றில் 6 வேற்றுமைகளும் எவ்வெவ் உருபுகளுடன் வந்தன என்றும், அவ்வேளையில் அவை எவ்வாறு இயங்கின என்றும் வேற்றுமையியலில் கற்றோம்.

    இவ்வியலில் அவை எவ்வாறு மயங்கி வந்து பொருள் தருகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.

    3
    ” கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
    உரிமையு முடைத்தே
    கண்ணென் வேற்றுமை “
    ( 84)

    இ-ள்:
    இரண்டாவதற்கு (ஐ) சொல்லப்பட்ட சார்புப் பொருண்மையானது,
    ‘ கருமச் சார்பு ‘ கருமமல்லாச் சார்பு ‘ என இரு வகைப்படும். இதற்குக் ‘கண்’ என்ற ஏழாம் உருபு காரணமாம்.

    1. தூணைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு. ஒன்றை ஒன்று மெய்யுறுதல்.
    2. தந்தையைச் சார்ந்தான் — இது கருமமல்லாச் சார்பு.
      இது மெய்யுறுதல் அல்லாத சார்பு.

    இந்தக் கருமமல்லாச் சார்புக்கு ‘கண்’ என்ற உருபு மயங்கி வரும்,
    அதாவது,
    ‘தந்தையைச் சார்ந்தான்’ என்றது ‘ தந்தைக்கண் சார்ந்தான்’ எனவும் மயங்கி வரும்.

    4
    இதே மயக்கம் வருமாறு:

    ” சினைநிலைக் கிளவிக்கு
    ஐயுங் கண்ணும்
    வினைநிலை யொக்கும்
    என்மனார் புலவர் ” (85)

    இ-ள்:
    சினைமேல் நிற்கும் சொல்லிற்கு இரண்டாவதும், ஏழாவதும் வினைநிலையிலே ஒக்கும் எ-று

    எ-டு:
    கிளையை வெட்டினான்,
    கிளையின்கண் வெட்டினான்.

    பிரமனின் தலையைக் கிள்ளினான், பிரமனின் தலையின்கண் கிள்ளினான்.

    5
    இனி, மூன்று உருபுகள் மயங்கி வந்தமையை விளக்குகிறார்:

    ” இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம் அவ்
    இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும்” ( 93)

    இ-ள்:
    ‘ நோக்குதல் ‘ இரண்டு வகை.

    கண்ணால் நோக்குதல் = நோக்கிய நோக்கம்.

    மனத்தால் நோக்குதல் =
    நோக்கல் நோக்கம்.
    இவை மூன்றாவதற்கும் (ஆன்), ஐந்தாவதற்கும் (இன்) பொருளாய் வரும் எ-று

    எ-டு:

    ” வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழும் குடி “
    ( குறள் – 542)

    இங்கு வள்ளுவனார் வான் நோக்கி, கோன் நோக்கி என்றவை வேற்றுமைத் தொகை. விரிக்கும் போது உருபுகள் வெளிப்படும்.

    1. வானை நோக்கி, கோனை நோக்கி — இங்கு ஐ உருபு (2) நின்றது.
    2. வானான் நோக்கி, கோனான் நோக்கி — இங்கு ஆன் உருபு (3) நின்றது.

    3 வானின் நோக்கி, கோனின் நோக்கி — இங்கு
    இன் உருபு (5) நின்றது.

    • இவ்வகுப்பு நிறைவு —
  • Class 19

    இலக்கண வகுப்பு – 19
    தொல்: சொல்: இயல் 2, வேற்றுமையியல் – தொடர்ச்சி

    சென்ற வகுப்பில் பெயர் எழுவாய், அதற்கு உருபுகள் இல்லை என்றும், ஏனைய உருபுகளை ஏற்று நடக்கும் என்றும், பயனிலை பெற்று முடியும் என்றும் கற்றுக் கொண்டோம். இன்று ஏனைய வேற்றுமை உருபுகள் எவ்வாறு பொருள் வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன என கற்றுக் கொள்வோம்.

    1
    இரண்டாம் வேற்றுமை, உருபு ‘ஐ’.

    “இரண்டா குவதே, ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    எவ்வழி வரினும் வினையே வினைக் குறிப்பு;
    அவ்விரு முதலில் தோன்றும் அதுவே ” ( 71)

    இ-ள்:
    ‘ஐ’ எனப் பெயர்பெற்ற வேற்றுமைச் சொல் இரண்டாவதாம். அஃதியாண்டு வரினும், வினையும் வினைக் குறிப்புமாகிய அவ்விரண்டு முதற் கண்ணும் தோன்றுமவை பொருளாக வரும் எ-று

    வினை – தெரிநிலை வினை.
    வினைக்குறிப்பு – குறிப்பு வினை எனவறிக

    எ-டு:

    குடம் வனைந்தான், இது வேற்றுமைத் தொகை.
    குடம் + ஐ + வனைந்தான், குடத்தை வனைந்தான், இது வேற்றுமை விரி.

    குழை உடையன், இது வேற்றுமைத் தொகை.
    குழை+ஐ+உடையன், குழையை உடையன், இது வேற்றுமை விரி.

    குடம் என்றது பெயரெழுவாய். ஐ இரண்டாம் வேற்றுமை உருபேற்றுச் செயப்படு பொருளானது. இங்கு வனைந்தான் = தெரிநிலை வினை முற்று.

    குழை பெயரெழுவாய், ஐ உருபேற்றுச் செயப்படு பொருளானது. உடையன் = குறிப்பு வினைமுற்று

    ‘ஐ’ உருபு ஆக்கல் பொருளில் = கோயிலைக் கட்டினான்.
    அழித்தல் பொருளில் = வீட்டை இடித்தான்.
    அடைதற் பொருளில் = நாட்டை அடைந்தான்.

    எ-டு : வள்ளலார் சுவாமிகள், பாடல் 418

    ” முத்தனை முத்திக் கொருதனி வித்தை
    முதல்வனை முருகனை முக்கண் பித்தனை
    அத்தன் எனக் கொளும் செல்வப் பிள்ளையைப் பெரியவர் உளஞ் சேர் சுத்தனைப் பத்தி வலைப்படு மவனைத்
    துரியனைத் துரியமுங் கடந்த சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
    தணிகையிற் கண்டு இறைஞ் சுவனே “

    பெருவேளூர்ப் பதிகம், அப்பர் சுவாமிகள் :

    ” மறையணி நாவினானை
    மறப்பிலார் மனத்துளானைக்
    கறையணி கண்டன் தன்னைக் கனலெரி ஆடினானைப்
    பிறையணி சடையினானைப் பெருவேளூர் பேணினானை
    நறையணி மலர்கள்தூவி
    நாள்தொறும் வணங்கு வேனே “

    2
    இனி, மூன்றாம் வேற்றுமை, உருபு – ஒடு

    ” மூன்றா குவதே, ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி; வினைமுதற் கருவி அனை முதற்றதுவே ” (73)

    இ-ள்:
    ‘ஒடு’ எனப் பெயரிய வேற்றுமைச் சொல் மூன்றாவதாம். அது வினைமுதலும், கருவியுமாகிய இரண்டு முதலையும் பொருளாகவுடைத்து எ-று

    எ-டு:
    பண் பாடினாள் – வேற்றுமைத் தொகை.
    பண்+ ஒடு+ பாடினாள் = பண்ணொடு பாடினாள், வேற்றுமை விரி.

    கவனிக்க :

    தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமை உருபாக ‘ ஒடு’ என்ற ஒன்றை மட்டுமே குறித்தார். பின்னால் வந்த நன்னூல் ஆல் ஆன் ஒடு ஓடு எனக் குறித்தது.

    ஆயின் ‘ ஆன் ‘ உருபும் மூன்றாம் வேற்றுமைச் சொல்லே எனச் சேனாவரையம் உரை செய்கிறது. ஆதலால் தொல்காப்பியர் ஒடு ஆன் இரண்டையுமே குறித்தார் எனக் கொள்ளுதல் வேண்டும். மேலும் பிந்திய ‘ ஆல் ‘ உருபுக்கு நிகராக, ‘ ஆன் ‘ உருபும் அன்றைய பயன்பாட்டில் இருந்தது என்பதும் தெளிவாகிறது.

    இவ்வுண்மையை வள்ளுவனார் உறுதி செய்கிறார்:

    ” அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழு மில ” ( அதி:4, குறள்: 39)

    இங்கு ஆல், ஆன் என வந்தமை காண்க.

    ” புறம் தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
    வாய்மையான் காணப் படும் ” ( அதி:30, குறள்: 298)
    இங்கும் நீரான் என்றும், வாய்மையான் என்றும் வந்தமை காண்க.

    ஆக, ஆன் ஒடு ஆகிய இரண்டுருபும் தொல்காப்பியர் காலத்தன என்பதும், ஆல் ஓடு உடன் என்பன பிற்காலத்தன என்பது முடிவாம்.

    3
    இனி நான்காம் வேற்றுமை, ‘ கு ‘ உருபு.

    ” நான்கா குவதே;
    குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    எப்பொரு ளாயினும் கொள்ளு மதுவே “
    ( 75)

    இ-ள்:

    கு எனப் பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச் சொல் நான்காவதாம். அது யாதானுமொரு பொருளாயினும் அதனை ஏற்று நிற்கும் எ-று

    எ-டு:
    சம்பந்தருக்குச் சிவிகை கொடுத்தான்
    தாளத்துக்கு ஓசை கொடுத்தாள்

    ” பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
    பாற்கட லீந்த பிரான்
    மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் ..”
    ( சேந்தனார் திருப்பல்லாண்டு)

    ” முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
    பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
    சித்திக்கு வித்துச் சிவபரந் தானாதல்
    சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே ” (திருமந்திரம்)

    4
    இனி ஐந்தாம் வேற்றுமை,
    ‘இன்’ உருபு.

    ” ஐந்தா குவதே
    இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
    இதனின் இற்றிது வென்னு மதுவே ” ( 77)

    இ-ள்:
    இன் எனப் பெயர் கொண்ட வேற்றுமைச் சொல் ஐந்தாவதாம். அஃது ‘ இப்பொருளின் தன்மைத்து இப்பொருள் ‘ என்னும் பொருளை உணர்த்தும் எ-று

    அதாவது ‘ ஒன்றைவிட மற்றொன்று ‘ எனுங்கால்
    ‘இன்’ உருபு வரும்.

    எ-டு:
    பாலின் வெண்மை நிலவு
    வேலின் கூர்மை விழிகள்.

    மேலும் இவ்வுருபு நான்கு முக்கிய பொருளிலும் வரும்.

    நீங்கற் பொருள்-
    மலையின் வீழருவி

    ஒப்புப் பொருள்-
    தேனின் இனிது தமிழ்

    எல்லைப் பொருள்-
    கொழும்பின் வடக்கு யாழ்ப்பாணம்

    ஏதுப் பொருள்-
    செல்வத்தின் பெரிது கல்வி.

    ” ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய் ” ( குறள் 69)

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
    திண்மை உண்டாகப் பெறின் (குறள் 54)