Literature Name : Yappu

  • Class 8

    இலக்கண வகுப்பு – 8

    தொல்: எழு: புணரியல்.

    சென்ற வகுப்பில் நால்வகைப் புணர்ச்சிகளைக் கற்றோம்,

    1. வேற்றுமைப் புணர்ச்சி
    2. அல்வழிப் புணர்ச்சி
    3. உருபுப் புணர்ச்சி
    4. சாரியைப் புணர்ச்சி.

    1
    எழுத்துச் சாரியை:
    ஏலவே சொன்ன
    விளக்கத்திற்கு மேலாக, இன்னுமொரு சாரியை வகை இதுவெனலாம்.
    அவை : காரம் கரம் கான்

    நெட்டெழுத்துச் சாரியை ஆவன:

    “அவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத் திலவே” (33-136)

    எழுத்துச் சாரியைகளில் கரமும் கானும் நெட்டெழுத்திற்கு உரியன அல்ல. ஆக, நெட்டெழுத்துக்கு காரமும், கானும் இணைந்து வரும்.

    எ-டு: ஆகாரம் ஈகாரம் ஊகாரம் …ஐகாரம் ஔகாரம். ( ஐகான் ஔகான் எனவும் வரும்)

    குற்றெழுத்துச் சாரியை:
    கரம் கான்
    எ-டு:
    அகரம்…அஃகான்

    ஆயினும் குற்றெழுத்துகளுக்கும் காரச் சாரியை குற்றமில்லை என்பர்.
    எ-டு:
    பிரணவ மந்திர சேர்க்கை அகாரவுகாரமகாரம் என்பதாலறிக.
    2
    மெய்யோடு புணர்ந்த உயிர், அம்மெய்யை நீங்கின் என்னவாம்?

    “மெய்யுயிர் நீங்கின் தன்னுரு வாகும் ” (37-140)


    மெய்யானது தன்னோடு கூடிய உயிரை நீங்குமிடத்து தனக்கே உரிய உருவைப் பெறும்.
    ( சைவசித்தாந்தம்: உயிரை நீங்கிய உடல் பிரகிருதி மாயா காரியங்களான பஞ்ச பூதங்களாகித் தனது மூல உருவினை அடையும் )
    3
    உடம்படு மெய் :
    நிறுத்தச் சொல் (நிலைமொழி) ஈற்றிலும், குறித்துவரு கிளவி (வருமொழி) முதலிலும் உள்ள இரு உயிர்களைச் சேர்க்கும் ‘ மெய்யெ ழுத்துகள்’ உடம்படுமெய் எனப்படும்.

    “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு
    மெய்யின் உருபு கொளல் வரையார் ” ( 38-141)

    இ-ள் :
    எல்லாவகை மொழிகளுக்கும் ( தனிமொழி தொடர்மொழி பொதுமொழி) உயிர் முதலாக வருமிடத்து, அவற்றிடை ‘ உடம்படு மெய்’ உருபுகொளும்.
    யகரமும் வகரமும் உடம்படு
    மெய்களாம். இகரவீறும், ஈகாரவீறும், ஐகாரவீறும் யகர உடம்படுமெய்யும், அல்லனவெல்லாம் வகர உடம்படுமெய்யும் கொள்ளுமெனவறிக.
    எ-டு:
    கிளி + அழகு = கிளியழகு
    விழி+அகலம்= விழியகலம்
    கலை+அழகு = கலையழகு

    கோ+இல் = கோவில்
    பூ+இதழ் = பூவிதழ்
    பா+இலக்கணம்= பாவிலக்கணம்.

    ( புணரியல் நிறைவு )

    இலக்கண வகுப்பு – 8 தொடர்ச்சி:

    தொகை மரபு – இயல் 5

    இவ்வியல், பின்னால் வரும் இயல்களான உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல்
    ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.
    ‘ தொகை ‘ என்பது தொக்க நிற்பது, தொகுக்கப்பட்டது எனப் பொருள் கொள்ளும்.
    இலக்கண நூல்களில் இவ்வாறு தொகை அமைவது மரபாகும் என்பதனால் ‘ தொகை மரபு ‘ எனப் பெயர் பெற்றது.
    1
    மெல்லினம் தோன்றுமிடம் எங்ஙனம் என்பதை இத் தலைச் சூத்திரம் விளக்கும். மெல்லின எழுத்துகள் ஆறு, அவற்றுள் ங ஞ ந ம என்ற நான்கெழுத்துகளும் தோன்றுமாறு காண்போம்:
    ” கசதப முதலிய மொழிமேல் தோன்றும்
    மெல்லெழுத் தியற்கை
    சொல்லிய முறையான்

    ஙஞநம வென்னும் ஒற்றா கும்மே
    அன்ன மரபின் மொழிவயி னான ” (1-144)

    இ-ள்:
    உயிரீற்றிலும் புள்ளியீற்றிலும் இருவழியும், கசதப க்களை முதலாகவுடைய மொழிகளின் மேல் தோன்றும் மெல்லெழுத்துகளின் இயல்பு கூறின், மெல்லெழுத்து மேற் சொல்லும் முறையிலான கசதப க்களுக்கு நிரனிறை வகையான் ஙஞநம என்னும் ஒற்றாகும்.
    உயிரீற்றுக்கு :
    பூ+கடம்பு= பூங்கடம்பு
    பூ+சோலை = பூஞ்சோலை
    மா+தளிர்= மாந்தளிர்
    பூ+பந்து= பூம்பந்து
    பூ+பாவை= பூம்பாவை.
    புள்ளியீற்றுக்கு:
    மரம்+கொத்தி= மரங்கொத்தி
    மரம்+சிறிது= மரஞ்சிறிது
    குடம்+தேய்ந்தது= குடந்தேய்ந்தது
    படம்+பெரியது= படம்பெரியது.
    2
    விரவுப் பெயர்:
    உயர்திணை, அஃறிணை எனும் இரு திணைகளிலும், ஐம்பால்களிலும் விரவி வரும் பெயர்கள் ‘ விரவுப் பெயர் ‘ ஆகும்.
    இவை:
    திணை விரவுப் பெயர், பால் விரவுப் பெயர், சினை விரவுப் பெயர், சினைமுதல் விரவுப் பெயர், முறை விரவுப் பெயர் என பலவாய் வரும்.

    “அஃறிணை விரவுப் பெயர் இயல்பு மாருளவே “( 13-156)

    இ-ள்:
    (உயர்திணையோடு) அஃறிணை விரவும் விரவுப் பெயர், இயல்பாய் முடிவனவுமுள, இயல்பின்றி முடிவனவும் உள- எ-று
    எ-டு:
    சிவந்தன், சாத்தன் — இரு திணைகளுக்கும் விரவியது. இது திணை விரவுப் பெயர்.
    சிவந்தி, சாத்தி — இரு பாலுக்கும் விரவியது. இது பால் விரவுப் பெயர்.
    முடவன், முடத்தி — சினை விரவுப் பெயர்
    சீழ்த்தலைச் சாத்தனார், சீழ்த்தலைச் சாத்தியாள் – இது சினை முதல் விரவுப் பெயர்
    தந்தை, தாய், தான், தாம் – இவை முறை விரவுப் பெயர்.
    ( இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட – அவை
    இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன
    தாம் விளையாட)

    3
    யாவர், யாது எனும் சொற்களின் ‘ மரூஉ’ .
    காலப் போக்கில் சிதைந்து உருமாறி வேறுபட்டு நிற்கும் சொற்கள் ‘மரூஉ’ ச் சொற்கள் எனப்படும்.

    “பலரறி சொன்முன் யாவ ரென்னும்
    பெயரிடை வகரங் கெடுதலு மேனை
    ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை
    ஒன்றிய வகரம் வருதலு மிரண்டும்
    மருவின் பாத்தியின் திரியமன் பயின்றே “
    (30-173)

    இ-ள்:
    பலரை அறியும் சொல் முன்னர் வருகின்ற ‘யாவர்’
    என்னும் பெயரிடையில் வகரம் கெடுதலும், ஒழிந்த ஒன்றனை அறியும் சொல்முன்னர் வரும் ‘யாது’ எனும் வினா மொழியிடையே உயிரோடு பொருந்திய வகரம் வருதலும், ஆகியவிரண்டும் மரூஉ க்களது முடிவினிடத்தே பயின்று வழங்கும் எ-று.

    எ-டு:
    அவர் யாவர்? – அவர் யார்?
    இங்கே வகரம் கெட்டது

    அது யாது? – அது யாவது?
    இங்கே வகரம் வந்தது.

    பலரறி சொல், ஒன்றறி சொல் ஆகிய தொல்காப்பியரின் சொல்லாட்சியை நோக்குக!

    — தொகை மரபு நிறைவு –

    இவை எடுத்துக்காட்டுப் பாக்கள் :
    1
    மெல்லினம் தோன்றுமிடம்:

    “ஏத்து மடியவ ரீரே ழுலகினை யும்படைத்தும்‌
    காத்து மழித்துந்‌ திரிபவ ராங்கமழ்‌ பூங்கடம்பு
    சாத்துங்‌ குழலணங்‌ கேமண நாறுநின்‌ றாளிணைக்கென்‌
    நாத்தங்கு புன்மொழி யேறிய வாறு நகையுடைத்தே. “ (அ/அந்தாதி 26)

    ” மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு
    அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!”
    (திருஞானசம்பந்தரின் பூம்பாவை திருப்பதிகம்)

    இதில் 10 தடவைகள் வரும்.

    2
    விரவுப் பெயர்:
    தான் —
    ” காணாதான் காட்டுவான் தான்காணான் கணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு ” ( தி/குறள் 849)
    தாம்–
    ” தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார் ” (398)
    3
    யார்?
    “எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு ” ( குறள் 423)

  • Class 7

    1 புணர்ச்சிக்குரிய இருமொழிகளின் இயல்பு:

    ” உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
    உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
    மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
    மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
    இவ்வென வறியக் கிளக்குங் காலை
    நிறுத்தச் சொல்லே குறித்துவரு கிளவியென்று ஆயீரியல
    புணர்நிலைச் சுட்டே ” (5-108)

    மூன்று சொற்கள் புணர வராதென்றும், இரு சொற்களே புணர்வதற்குரியன என்றும், அவ்வகையால் புணர்ச்சிகள் நால்வகை என்றும் இச் சூத்திரம் உணர்த்திற்று.

    அவையாவன :

    1. உயிரீறும் உயிர்முதலும் புணர்தல்
    2. உயிரீறும் மெய்முதலும் புணர்தல்
    3. மெய்யீறும் உயிர்முதலும் புணர்தல்
    4. மெய்யீறும் மெய்முதலும் புணர்தல்.

    எ-டு :
    ஆ + உறங்கிற்று = ஆவுறங்கிற்று
    ஈ + மொய்த்தது = ஈமொய்த்தது.
    ஆல் + இலை = ஆலிலை
    ஆல் + வீழ்ந்தது = ஆல்வீழ்ந்தது.

    இவ்வாறு நால்வகைப் புணர்ச்சிகளும் நிகழுங்காலை, மூவகைத் திரிபுகள் தோன்றும்.

    “அவைதாம்; மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று இவ்வென மொழிப திரியுமாறே ” (7-110)

    அவை : தோன்றல் திரிதல் கெடுதல் என பின்னைய இலக்கணவாதிகள் உரைப்பர், இவற்றை நன்னூலார் ‘ இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி ‘ எனக் கூறுகிறார்.
    எ-டு:
    பொன்+ குடம் = பொற்குடம்
    ( இது மெய் பிறிதாதல் என்ற திரிதல்)
    யானை+கோடு = யானைக்கோடு ( இது மிகுதல் என்ற தோன்றல்)
    மரம்+ வேர் = மரவேர் ( இது குன்றல் என்ற கெடுதல்)

    தொல்: எழு: புணரியல் தொடர்ச்சி.
    1
    இங்கு இருவகைப் புணர்ச்சி பேசப்படுகிறது.

    ” வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காலை ” (10-113)

    இ-ள்:
    வேற்றுமையின் பொருண்மையைக் குறித்த புணர்மொழியின்
    நிலைமையும், வேற்றுமை அல்லாத அல்வழியிடத்துப் புணர்மொழியின் நிலைமையும், புணர்ச்சிக்கண் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டு இலக்கணத்தினாலும், நடாத்துதலை வலியாயுடையன எ-று

    அதாவது வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்ற இருவகைப் புணர்ச்சி ஈண்டு காட்டினார்.
    எ-டு:
    சிவன் மகன் முருகன்–
    இது வேற்றுமைத்தொகை, பொருளை வேறுபடுத்திக் காட்டுவது ‘ வேற்றுமை ‘ என்ப.
    கொல்யானை– இது அல்வழிப் புணர்ச்சி

    2
    அடுத்து ‘ உருபுப் புணர்ச்சி’ யில் வேற்றுமை உருபுகள் எவையெனக் குறிக்கிறார்.

    “ஐஒடு குஇன் அதுகண் என்னும் அவ்வா
    றென்ப வேற்றுமை யுருபே” (11-114)

    இ-ள்:
    ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும் அவ்வாறும் ‘ வேற்றுமை உருபுகள் ‘ என்பர். இந்த ஆறும் அல்லாதன எல்லாம் ‘ அல்வழி ‘ எனப்படும். அவை:
    எழுவாய், விளி, உவமைத் தொகை, உம்மைத் தொகை, பண்புத் தொகை, இருபெயரொட்டுப் பண்புத் தொகை, முற்று, இருவகை எச்சங்கள், இடை, உரி என்பனவாம்.

    3
    வலி முதலுருபுகள் புணரும் நிலை எவ்வாறென ஈண்டு விளக்குகிறார். இது நான்காவது வேற்றுமை உருபாகிய ‘ கு ‘ உக்கும், ஏழாவது ‘ கண் ‘ என்றதற்கும் புணர்ச்சி நிலை பற்றி இச் சூத்திரம் உணர்த்திற்று.

    “வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு ஒல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும் ” ( 12- 115)

    இ-ள்:
    வல்லெழுத்து முதலாகவுடைய வேற்றுமை உருபிற்கு, பொருந்தியவிடத்து வல்லொற்றாயினும், மெல்லொற்றாயினும் இடைக்கண் மிகுதல் வேண்டும் எ-று
    எ-டு:
    ஊர் + கு = ஊர்க்கு. நீர்+ கு = நீர்க்கு. இங்கு ‘ க் ‘ மிகுந்தது. ஊர்+ கண் = ஊர்க்கண்.

    4
    இச் சூத்திரத்தினூடே ‘ அது ‘ உருபின் அகரம் கெடும் முறையைக் காட்டுகிறார். அது = ஆறாம் வேற்றுமை உருபாம்.

    “ஆறன் உருபின் அகரக் கிளவி,
    ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும் ” ( 13-116 )

    இ-ள்:
    ஆறாம் வேற்றுமை உருபாகிய ‘ அது ‘ என்னும் சொல்லினுடைய அகரமா கிய எழுத்து, மொழியீற்றே உளதாகிய அகரத்தின் முன்னர் தான் கெடுதல் வேண்டும் எ-று
    எ-டு:
    நம் + அது = நமது. எமது, தனது, எனது, நினது எனவரும்.

    5
    இனி சாரியை பற்றியும் அதன் புணர்ச்சி பற்றியும் குறிக்கிறார். சாரியை ஆவது தனித்துப் பொருள் தராமல் சொற்களுக்கிடையே பொருளை வலுப்படுத்தவும், ஒலியின்பம் தரவும் சார்பாக வருவதாகும். இதனை ‘ இடைச்சொல்’ என்றுங் குறிப்பர். ( Increment, wings, Aligning part)

    “அவைதாம்; இன்னே வற்றே அத்தே
    அம்மே ஒன்னே ஆனே அக்கே
    இக்கே அன்னென் கிளவி உளப்படப்
    பிறவும் அன்ன என்ப சாரியை மொழியே ” (17 – 120)

    இ- ள்:
    மேலே சாரியை எனப்பட்டவை, இன் வற்று அத்து அம் ஒன் ஆன் அக்கு இக்கு அன் என்ற ஒன்பதும் பிறவுமாம். பிறவுமென்றது, தம் நும் எம் கெழு ஏ ஐ ஞான்று என்பனவும் கொள்க.

    எ-டு
    இன்:
    குழை+இன்+அன் = குழையினன்.


    “போதையார் பொன்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
    தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
    காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
    பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே “
    (ஞானசம்பந்தர், 3-24)

    அத்து:
    மரம்+அத்து+ஐ = மரத்தை
    மரம்+அத்து+ இல் = மரத்தில்.
    பரம்+அத்து+ஐ = பரத்தை
    பரம்*அத்து+இல் = பரத்தில்

    ” மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே “
    ( திருமந்திரம்)

    அம் :
    “சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
    பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
    கன்னங் கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்
    தன்னந் தனி இருப்பார்க்கு இதுபோலும் தவமில்லையே “
    (அ/அந்தாதி)

  • Class 6

    இலக்கண வகுப்பு – 6, 03-12-2025. புணரியலின் தொடர்ச்சி

    1 புணர்ச்சிக்குரிய இருமொழிகளின் இயல்பு:

    “உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
    உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
    மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
    மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியுமென்று
    இவ்வென வறியக் கிளக்குங் காலை
    நிறுத்தச் சொல்லே குறித்துவரு கிளவியென்று ஆயீரியல
    புணர்நிலைச் சுட்டே” (5-108)

    மூன்று சொற்கள் புணர வராதென்றும், இரு சொற்களே புணர்வதற்குரியன என்றும், அவ்வகையால் புணர்ச்சிகள் நால்வகை என்றும் இச் சூத்திரம் உணர்த்திற்று.

    புணரியலின் தொடர்ச்சி
     அவையாவன :

    1. உயிரீறும் உயிர்முதலும் புணர்தல்
    2. உயிரீறும் மெய்முதலும் புணர்தல்
    3. மெய்யீறும் உயிர்முதலும் புணர்தல்
    4. மெய்யீறும் மெய்முதலும் புணர்தல்.

    எ-டு :
    ஆ + உறங்கிற்று = ஆவுறங்கிற்று
    ஈ + மொய்த்தது = ஈமொய்த்தது.
    ஆல் + இலை = ஆலிலை
    ஆல் + வீழ்ந்தது = ஆல்வீழ்ந்தது.

    இவ்வாறு நால்வகைப் புணர்ச்சிகளும் நிகழுங்காலை, மூவகைத் திரிபுகள் தோன்றும்.

    புணரியலின் தொடர்ச்சி
     “அவைதாம்;

    மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று
    இவ்வென மொழிப திரியுமாறே” (7-110)

    அவை : தோன்றல்
    திரிதல்
    கெடுதல் என பின்னைய இலக்கணவாதிகள் உரைப்பர்,
    இவற்றை நன்னூலார் ‘இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி’ எனக் கூறுகிறார்.

    எ-டு:
    பொன்+ குடம் = பொற்குடம் (இது மெய் பிறிதாதல் என்ற திரிதல்)
    யானை+கோடு = யானைக்கோடு (இது மிகுதல் என்ற தோன்றல்)
    மரம்+ வேர் = மரவேர் (இது குன்றல் என்ற கெடுதல்)

    மீட்டல் வகுப்பு நிறைவு, காணொளியைப் பார்க்கவும்

  • Class 5

    இலக்கண வகுப்பு – 5 (26/11/2025),
    பிறப்பியல் தொடர்ச்சியும் புணரியலும்,
    தொல்: எழுத்ததிகாரம்

    1 ஈண்டு தகார, நகாரப் பிறப்புகள் பேசப் படுகின்றன.

    அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்
    நாநுனி பரந்து மெய்யுற வொற்றத்
    தாமினிது பிறக்குந் தகார நகாரம் (11-93)


    இ-ள் :
    அண்ணத்தைப் பொருந்திய பல்லினது அடியாகியவிடத்தே, நாவின்நுனி பரந்து, வடிவை உறும்படி ஒற்ற, தகாரமும் நகாரமும் தாம் இனிதாகப் பிறக்கும்.
    றன : ( இவையும் அவ்வாறே)

    ரழ :

    நுனிநா அணரி அண்ணம் வருட
    ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (13-95)

    இ-ள் :
    நுனிநா மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்.

    லள:

    நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற
    ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
    லகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (14-96)

    இ-ள்:
    நாவின் விளிம்பு தடித்துப் பல்லின் அணியிடத்தைப் பொருந்த, அந்நாவின் முதலிடத்தே அண்ணத்தை ஒற்ற லகாரமும், அதனைத் தடவ ளகாரமும் பிறக்கும்.

    பம:

    இதழியைந்து பிறக்கும் பகார மகாரம் (15-97 )


    இ-ள்:
    கீழிதழும், மேலிதழும் தம்மில் இயையப் பகாரமும் மகாரமும் பிறந்து வரும்.

    வ:
    பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும் (16-98)

    இ-ள்:
    மேற்பல்லும் கீழிதழும் தம்மில் இயைய, வகாரம் பிறக்கும்.

    ய:

    அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
    கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும் (17-99)

    இ-ள் :
    அண்ணத்தை நாச் சேர்ந்தவிடத்து, மிடற்றினின்றும் வளியாலான இசை, அவ்வண்ணத்தை அணைந்து செறிய, யகாரம் பிறக்கும்.

    (சார்பெழுத்துகள் தாம் சார்ந்த எழுத்துகள் போலவே பிறக்கும். அவற்றின் பிறப்பு வழியே இவற்றின் பிறப்பு இவற்றின் பிறப்பு வழியாம் எனவுணர்க.
    எ-டு :
    குற்றியலுகர எழுத்துக்குப் பிறப்பு வழி, உகரம் பிறந்ததற்கான பிறப்பு வழியேயாம்.)

    — பிறப்பியல் நிறைவு —

    தொல்: எழுத்ததிகாரம், புணரியல் (4 )
    புணரியல்: F1B039

    இது எழுத்துகளின் புணர்ச்சி பற்றி விளக்குகிறது. இவ் வியலிலிருந்து ஏனைய 5 இயல்களும் புணர்ச்சி பற்றியே விளக்கமளிக் கின்றன. எனவே இவ்வியல் புணர்ச்சி இலக்கணத்திற்கு ஒரு முகவுரை போல அமைந்துள்ளது எனலாம்.
    இவ்வியலில் 40 சூத்திரங்கள் காணப் படுகின்றன.

    புணர்ச்சி பற்றிய சில முக்கியமான குறிப்புகள்:

    • புணர்வது எழுத்துகளேயன்றிச் சொற்களல்ல.
    • புணர்ச்சி நிகழ்வதற்கு இரண்டு மொழி/சொற்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும்.
    • முன்னால் வந்த சொல் நிறுத்தச்சொல் என்றும்,
    அதனோடு புணர வரும் சொல் குறித்துவரு கிளவி என்றம் தொல்காப்பியர் குறித்துள்ளார்.

    இவை பின்வந்த இலக்கணகாரர்களால்
    நிலைமொழி, வருமொழி என அழைக்கப்படுகின்றன.
    • உண்மையிலேயே இறுதி எழுத்தும், முதலெழுத்துமே புணர்கின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
    • ஈறுகள் மெய்யீறு/உயிரீறு எனவும், முதலெழுத்து உயிர்முதல்/உயிர்மெய்முதல் எனவும் பெயர் கொள்ளும்.

    முதற் சூத்திரத்தில் புணர்சிக்கு நின்ற மொழிகளின் முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் கூறுகிறார்.

    மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின்
    இரண்டுதலை யிட்ட முதலா கிருப ஃது
    அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்
    எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
    மெய்யே யுயிரென்று ஆயீரியல (1-104)

    இச் சூத்திரத்தின் பொருட் சாராம்சம் :

    புணர வரும் மொழிமுதல் எழுத்துகள் 22 என்றும், நிலைமொழியின் இறுதி எழுத்துகள் 24 என்றும், இவை 33 எழுத்துகளினுள்ளே அடக்கம் என்றும் சொல்கிறார் எனத் தெளிக.

    இங்கு 22 தொகை எனவும், அதன் விரி
    12 உயிர்,
    9 உயிர்மெய்,
    1 மொழிமுதற் குற்றியலுகரமும் ஆகும்,
    (ஒரு மொழிமுதற் குற்றியலுகரமும் ஆகும்.)

    24 தொகை,
    இதன் விரி
    12 உயிர்,
    11 மெய்,
    1 ஈற்றுக் குற்றியலுகரமும் ஆகுமாம்.
    இவ்வாறு வரும் எழுத்துகள் ஈறாகவும், முதலாகவும் கூடிப் புணரும் எனவறிந்து கொள்க!
    33?

    இத்துடன் வகுப்பு 5 நிறைவு, ஐயம் தெளிதல்

  • Class 4

    இலக்கண வகுப்பு – 4 – 19/11/2025
    தொல்; எழுத்ததிகாரம்- மொழிமரபு தொடர்ச்சியும் பிறப்பியலும்:
    1 மொழி முதலெழுத் துக்கள்:
    ஒரு மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள்( உயிர்கள்)
    பற்றி உரைக்கிறார்.

    ” பன்னீ ருயிரும் மொழி முதலாகும் ” (26:59)


    இ-ள்: 12 உயிரெழுத்து களும் மொழிக்கு முதலாமாறு இஃது உணர்த்திற்று. இத்தன்மை உயிரின் சிறப்பென்க.
    எ-டு: அடை ஆடை இடை ஈயம் உரல் ஊர்தி
    எழுத்து ஏணி ஐயம் ஒளி ஓசை ஔவியம்.
    ** அகரம் முதலாவரும் செய்யுள்கள் ஆயிர மாயிரம். அதிலொன்று இத் திருப்புகழ்:
    ” அகரமு மாகி அதிபனு மாகி அதிகமு மாகி — அகமாயி
    அயனென வாகி அரியென வாகி அரனென வாகி – அவர் மேலாய்
    இகரமு மாகி எவைகளு மாகி இனிமையு மாகி – வருவோனே
    இருநில மீதில் எளியனும் வாழ எனது முனோடி – வரவேணும்
    Slide 3

    தனிமெய் மொழி முதலாகாமை.
    ” உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா ” (27-60)
    உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனி மெய்கள் மொழிக்கு முதலாகா: எனவே உயிர்களும், உயிர்மெய்களும் மொழிக்கு முதலாம் எ-று

    மேலும் ங ட ண ர ல ழ ள ற ன என்பன மொழிக்கு முதலாகா மெய்களாம். இவை மெய்களாக, உயிர்மெய்களாக மொழிக்கு முதலாக வரா எனவறிக. இவ்வாறு 94 எழுத்துக்கள் மொழிக்கு முதலாகும் என்பார் நச்சர்.

    மொழியிறுதி எழுத்துக்கள் :
    ” உயிர் ஔஎஞ்சிய இறுதி யாகும் ” (36-69)
    உயிர் எழுத்துகளுள் ஔகாரம் ஒழிந்தவை மொழிக்கு ஈறாம்.
    எ-டு: உள பலா கிளி தேனீ நடு பூ சேஎ எங்கே மழை நொ மலரோ கௌ
    ( சேஎ – காளைமாடு)
    எகாரம் அளபெடையாக வரும், பெரும்பான்மை மெய்யோடிணைந்து ஈறாகாது.

    மொழியீறாம் மெய்கள் :
    ” ஞண நமன யரலவழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி ” (45-78)

    எ-டு:
    உரிஞ் மண் வெரிந் திரும் பொன் வேய் வேர் வேல் தெவ் வீழ் வேள் என்பன.
    ( உரிஞ்- தோல். வெரிந் – மதுகு. திரும் – திரும்பு. தெவ் – பகை. வேள் – தலைவன், அரசன்)
    இவற்றில் ‘ தெவ் ‘ வுக்கு:
    கந்தபுராணம், தக்ஷ காண்டம், உபதேசப் படலம்,30;
    ” வானவரென்றும் எம்மை வழுத்தினர்க்கு அருள்வோ மல்லா
    ஏனையர் தம்மை தெவ் வென்றெண்ணியே இருத்தும் யாமே “
    — மொழிமரபு நிறைவு –

    பிறப்பியல் (PHONETICS)- இயல் – 3
    6.
    ” தமிழ் எழுத்துக்க ளெல்லாம் ஒலியை அடிப்படையாகக் கொண்டவை எனக் கூறிய தொல்காப்பியர், அக் கூற்றினை மேலும் வலுவாக்குமாறு ‘ பிறப்பியல்’ என்ற இயலைப் படைத்துள்ளார்.
    தமிழ் எழுத்துக்களான உயிர், மெய், உயிர்மெய், சார்பு என்பன எவ்வாறு பிறக்கின்றன என்பதை இவ்வியலில் நாம் காணலாம்.


    எழுத்துக்கள் பொதுவாகப் பிறக்கும் முறைமையைத் தலைச்சூத்திரம் விளக்குகிறது.

    “உந்தி முதலா முந்துவளி தோன்றித்
    தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
    பல்லும் இதழும் நாவும் மூக்கும்
    அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
    உறுப்பற் றமைய நெறிப்பட நாடி
    எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
    பிறப்பி னாக்கம் வேறுவே ரியலத்
    திறப்படத் தெரியுங் காட்சி யான ” ( 1-83)


    சகல விதமான எழுத்துகளின் பிறப்புகளுக்கு இது பொதுவான முறையென அறிக.
    இ-ள் : தமிழெழுத்துக்கள் எல்லாம் ஒருவன் முறைப்படவாராய்ந்து சொல்லுங்காலை, கொப்பூழ் அடியாக மேலே கிளர்கின்ற உதானன் என்னும் வாயு தோன்றித் தலை, மிடறு, நெஞ்சு ஆகிய இடங்களில் நிலைத்து நின்று, அவற்றோடு பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் சேர்ந்து எட்டு இடங்களான உறுப்புக்களில் பொருந்தி நின்று, எழுத்துக்களின் பிறப்பாக்கம் வேறுவேறு வகையாகப் பிறக்கும் எ-று

    இச் சந்தர்ப்பத்தில் சைவசித்தாந்தம் பக்கமாகச் சற்று நோக்கினால், மேலும் வியப்பாகவிருக்கும். அக்கரங்களின் ஒலிகள் எல்லாம் மனிதனின் மூலாதாரத்தில் பிறந்து, வாய்வழியாக வாக்குகளாக வெளிப்படும் என்று சித்தியார் சொல்கிறது.


    (சூக்கும வாக்கது உள்ஓர் சோதியாய் அழிவதின்றி ஆக்கிடும்…43
    ” வேற்றுமைப் பட்டவன்னம் … மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போன்றாங்கு பைசந்தி நிற்கும்…42
    பிறகு மத்யமை வாக்கு, வைகரியாகிச் செவியில் கேட்கும்… 40)

    8
    பிறப்பியலில் முதலாவதாக உயிரெழுத்துக்கள் பிறக்கும் முறை உணர்த்துகிறார். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவான முறைமையாகும்.

    “அவ்வழிப், பன்னீருயிரும் தந்நிலை திரியா, மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்” (2-84)

    அவ்வழியே, 12 உயிரெழுத்துகளும் தத்தம் நிலையில் திரியாதாய், மிடற்றின்கண் பிறந்த வளியான் ஒலிக்கும் “

    அ ஆ பிறக்குமாற்றை இச் சூத்திரம் உணர்த்துகிறது.

    ” அவற்றுள், அ ஆ ஆயிரண் டங்காந் தியலும் ” -(3-85)

    உயிர் பன்னிரண்டுள் அகர ஆகாரங்களான இரண்டும் அங்காந்து சொல்ல அதனிடமாகப் பிறக்கும்.
    10
    இங்கு இகரம் முதலியன பிறக்குமாறு சொல்கிறார்.

    ” இ ஈ எ ஏ ஐயென இசைக்கும் அப்பாலை ந்தும் அவற்றோ ரன்ன:
    அவைதாம்: அண்பல் முதல்நா விளிம்புற லுடைய ” (4: 86)


    இ ஈ எ ஏ ஐ ஆனவைந்தும் அங்காந்தே பிறக்கும். அவை; பல்லின் அண்மை இடத்தினை நாவின் அடிவிளிம்பு சென்றுறும் எ-று
    11

    உ ஊ ஒ ஓ ஔ எனவிசைக்கும் அப்பா
    லைந்தும் இதழ்குவிந் தியலும் ” (5-87)

    12
    ஏனையவை சுருக்கமாக;
    க் ங் போன்ற சில மெய்கள் நாமுதலும் அண்ண முதலும் உறப் பிறக்கும்.
    ச் ஞ் நாவின் இடையும் அண்ணத் திடையும் உறப் பிறக்கும்.
    ட் ண் நாவின் நுனியும் அண்ணத்தின் நுனியும் உறப் பிறக்கும்.

    — இவ் வகுப்பு நிறைவு –

  • Class 3

    இலக்கண வகுப்பு – 3
    12/11/2025.

    தொல்: எழுத்ததிகாரம், இயல் 2, மொழிமரபு.

    மொழிமரபு – சுருக்க அறிமுகம்

    குற்றியலிகரம்:
    இகரம் தன் மாத்திரையிலும் குறுகி ஒலிப்பதே குற்றியலிகர மாகும். குற்றியலுகரத்தை அடுத்து யா வரும்புழி, அவ்வுகரம் இகரமாகும்.
    எ-டு: நாகு+ யாது = நாகியாது.
    கொக்கு + யாது = கொக்கியாது.
    குரங்கு + யாது = குரங்கியாது.

    குற்றியலுகரம் :

    “நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே ” (3-36)

    நெட்டெழுத்தின் பின்னாலும், தொடர்மொழி இறுதியிலும் வல்லாறுகளின் மேல் ஏறிவருவது குற்றியலு கரமாம்.
    வல்லாறு – கசடதபற. அவற்றின் மேல் உகரம் ஏற, குசுடுதுபுறு எனக் குற்றியலுகரமாக ஒலிக்கும்.
    எ-டு : நாகு ஆசு நாடு தூது திரிபு ஆறு. இங்கே உகரம் குறுகியமை காண்க.

    அளபெடை :

    “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
    நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே ” (41-8)

    இ-ள் : குன்றுவதான ஓசையுடைய அவ்வளபெடை எழுத்தாலான மொழிக்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும் அவை யாதெனில்; நெட்டெழுத்துகளின் பின்னாக இனமொத்த குற்றெழுத்துக்கள் ஆகும்.

    எ-டு: ஆஅ. ஈஇ. ஊஉ. ஏஎ. ஓஒ எனவரும்.

    அளபெடை என்பது எழுத்தின் ஒலிக்கு மாத்திரை கூட்டி ஒலிப்பதாகும். இங்கு ஆ வுக்கு 2 மாத்திரை, அ வுக்கு ஒரு மாத்திரை, இவ்விரண்டும் கூடி ஒலித்ததால் அதற்கு மூன்று மாத்திரையாம்.

    அளபெடை 3 வகை :

    1 செய்யுளிசை அளபெடை
    2 சொல்லிசை அளபெடை
    3 இன்னிசை அளபெடை

    செய்யுளிடையே ஓசை குறைந்தவிடத்து, அதனை நிறைவு செய்யப் பயன் படுவது ‘ செய்யுளிசை அளபெடை ‘ ஆம்.


    “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள்: பெய்யெனப் பெய்யும் மழை ” ( வள்ளுவர்)

    ஒரு பெயர்ச் சொல்லை வினையெச்சமாக மாற்றுவது ‘ சொல்லிசை அளபெடை ‘ ஆகும்.

    எ-டு : தொகை – தொகைஇ ( தொகுத்து)
    வளை – வளைஇ ( வளைத்து)


    ” உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
    வரனசைஇ யின்னு முளேன் ” ( வள்ளுவன்)


    ( உரன் — வெற்றி. வரன் – வருகை. நசை – விருப்பம். இங்கு பெயர் வினை யெச்சமானது. )

    ” செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
    அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
    மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
    ஆலயந் தானும் அரனெனத் தொழுமே “
    ( சிவஞானபோதம் நூற்பா 12)
    கழீஇ – கழுவி. மரீஇ – மருவி இணைந்து.

    ஒரு செய்யுளில் ஓசை குறையாதவிடத்தும், மேலும் இனிய ஓசை பெறும் பொருட்டு, குறில் எழுத்துகள் நெடில்களாகி அளபெடுத்தல் ‘ இன்னிசை அளபெடை ‘ ஆகும்.


    “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வார் மற்றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை” ( வள்ளுவன்)


    து –> தூஉ என நெடிலாகி 3 மாத்திரை பெற்றது.
    திரு முருகாற்றுப்படையில் நிறைய உண்டு.
    (சென்னிப் பொற்ப நகை தாழ்பு துயல்வரூஉம் .. )

    ஐகார ஔகார அளபெடை:

    “ஐ ஔ என்னும் ஆயீ ரெழுத்திற்கு; இகர உகரம் இசைநிறை வாகும் ” (9-42)

    ஐ ஔ என்ற இரண்டெழுத்திற்கும் ஒத்த
    குற்றெழுத்துகள் இல்லாத காரணத்தால், இகரமும் உகரமும் வந்து நின்று ஒசை நிறைக்கும்.

    எ-டு : ” சேண்விளங்கு இயற்கை வாண்மதி கலைஇ .. ” .. சீரை தைஇய
    உடுக்கையர்… ” ( திருமுருகாற்றுப்படை)

    ஓரெழுத் தொரு மொழி:
    எழுத்துக்கள் சில ஓரெழுத்தாக நின்ற போதிலும், அவை மொழியாகவும் நிற்கும்.
    ” நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி ” ( 10-43)
    எ-டு : ஆ – பசு, ஆன்மா
    ஈ – கொடு, ஈ
    ஊ.- ஊன்
    ஏ – அம்பு
    ஐ – தலைவன்
    ஓ – மதகு
    ஔ – பூமி, நிலம் ( கௌ உம் வரும் )
    இவ்வாறு ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தாகவும் அதற்கு மேலும் வருமாயின், அவை
    ‘ பலவெழுத்தால் இசைக்கும் தொடர்மொழி ‘ எனப்படும் என்கிறார் தொல்காப்பியர். ( 11-45)

    எ-டு :
    மணி — ஈரெழுத் தொரு மொழி. ( தொடர்மொழி)
    அழகு — மூவெழுத்தொரு மொழி. ( தொடர்மொழி)
    கதிரொளி — நான்கெழுத் தொருமொழி. ( தொடர் மொழி)
    அகத்தியனார் — ஐந்தெழுத்
    தொருமொழி ( தொடர் மொழி)

    போலி எழுத்துகள் :

    ” அகர இகரம் ஐகார மாகும் ” ( 21-54)

    அகரத்தையும் இகரத்தையும் கூட்டிச் சொல்ல, அது ஐகாரம் போல ஒலிக்கும்.

    எ-டு :
    அஇயர், அய்யர் — ஐயர்

    இதே போல அகரமும் உகரமும் ஔகாரமாகும்.
    எ-டு :
    அஉவை, அவ்வை — ஔவை.

    இவற்றையும் காண்க :
    அய்வனம் – ஐவனம்
    வயிரம் – வைரம்
    கவுதாரி – கௌதாரி
    நாய் – நாஇ
    ( போலிகளைக் கொள்ளற்க என்கிறார் இளம்பூரணனார்)

    உயிர்நெடில்களே பெரும்பாலும் அளவெடுப்பதனால், அவற்றை ‘ உயிரளபெடை’ என்றும், அரிதாக அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளை ‘ ஒற்றளபெடை ‘ எனவும் குறிப்பர்.

    ஒற்றளபெடைக்கு எடுத்துக்காட்டு :
    “இலங்ங்கு வெண்பிறை சூடீசன் அடியார்க்குக்
    கலங்ங்கு நெஞ்சமிலை காண் “

    இது ‘ அண்மைச் சுட்டுக்கு உதாரணம் ( சென்ற வாரத்திற்குரியது)
    திருஞானசம்பந்தர் திருக்கடைக் காப்பு :

    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
    ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
    பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

    Tamil Literature

    Quiz 3

    1 / 14

    1 “கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை; நுண்ணிதின்
    உணர்ந்தோர் கண்ட வாறே ” (7)
    மாத்திரையாவது யாது?

    2 / 14

    2 “மெய்யின் அளபே அரையென மொழிப.”
    மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை?

    3 / 14

    3 நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை ?

    4 / 14

    4 மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை ?  (அரை, ஒன்று இரண்டு)

    5 / 14

    5 உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை ?

    6 / 14

    6 உயிர்மெய் நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை ? (அரை,

    ஒன்று,இரண்டு)

    7 / 14

    7 “மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முன் தாம்வரூஉம் ரழலங் கடையே” (30)
    (ரழ தவிர்ந்த எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம்வந்து மயங்கும்.) இதற்கு சரியான எடுத்துக்காட்டு )

    8 / 14

    8 “நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே ” (3-36)
    நெட்டெழுத்தின் பின்னாலும், தொடர்மொழி இறுதியிலும் வல்லாறுகளின் மேல் ஏறிவருவது குற்றியலு கரமாம்.
    அவை

    9 / 14

    9 இனவெழுத்து பற்றிய கூற்று.
    அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம்.

    10 / 14

    10 கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை கண்டறிக
    ‘பந்தயம், பத்து, கற்கண்டு, தென்றல், நன்று’

    11 / 14

    11 அளபெடை :
    “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்
    நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே” (41-8)
    (இ-ள் : குன்றுவதான ஓசையுடைய அவ்வளபெடை எழுத்தாலான மொழிக்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும் அவை யாதெனில்; நெட்டெழுத்துகளின் பின்னாக இனமொத்த குற்றெழுத்துகள் ஆகும்.)
    மேற்சொன்ன நூற்பாவுக்கான மிகச்சரியான மூன்றைத் தெரிவு செய்க?

    12 / 14

    12 தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ?

     

    13 / 14

    13 தன் மாத்திரையிற் குறைவாக ஒலிக்கும் உகரத்துக்குப் பெயர் யாது?

    14 / 14

    14 பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.

    Your score is

    The average score is 58%

    0%

  • Class 2

    உயிர்க் குறில் 5 :

    “அவற்றுள், அ இ உ எ ஒ வென்னும் அப்பால் ஐந்தும் ஓரளபிசைக்கும் குற்றெழுத் தென்ப ” –3

    இது அளவும் குறியும் உணர்த்திற்று. இக் குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று. குற்றெழுத்து, குறில், குற்றுயிர், குறுக்கம் என்றும் குறிப்பர்.

    உயிர் நெடில் 7 :

    “ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பா லேழும் ஈரளபிசைக்கும் நெட்டெழுத் தென்ப ” – 4

    இவற்றுக்கு மாத்திரை இரண்டு. நெட்டுயிர், நெடில், நெட்டெழுத்து, நீட்டம் என்றும் உரைப்பர்.


    மாத்திரைக்கு அளபு :

    “கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை; நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே ” – 7


    இங்கு கண்ணிமைத்தலுக்கும், நொடிக்கும் ஓசையை அளவிடுக. நொடித்தலை விட இமைத்தலே சிறந்ததாம்.

    மெய் 18:

    ” னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப ” (9)

    க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் – இதற்கு 1/2 மாத்திரை.
    எ-டு: காக்கை, பாங்கு….
    வகைகள் 3 : வல்லின மெய் – 6, மெல்லினமெய் : 6, இடையின மெய் : 6
    வல்லின மெய் – 6
    க் ச் ட் த் ப் ற் – இவை மெய்யெழுத்து வரிவடிவம்.
    இவை உயிர்மெய் வரிவடிவில் க ச ட த ப ற என வரும். இவை வல்லெழுத்து, வல்லினம், வல்லாறு, வன்கணம் எனவும் வழங்கும்.

    மெல்லினமெய் : 6
    ங் ஞ் ண் ந் ம் ன் – இவை மெய் வரிவடிவம். ங ஞ ண ந ம ன என்பது உயிர்மெய் வடிவம். இவை மெல்லெழுத்து, மெல்லினம், மெல்லாறு, மென்கணம் எனவும் வழங்கும்.

    இடையின மெய் : 6
    ய் ர் ல் வ் ழ் ள்- இவற்றின் உயிர்மெய் வடிவம் ய ர ல வ ழ ள என வரும்.
    இம்மூவினங்களையும் கூட்ட 18 மெய்களும் வரும். இங்கு மெய்க்கு 1/2 மாத்திரை, உயிர்மெய்க்கு ஒரு மாத்திரை.

    உயிர்மெய் எழுத்தின் இயல்பு ;

    “புள்ளியில்லா எல்லா மெய்யும் உருவுறு வாகி அகரமோ டுயிர்த்தலும் ஏனை உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்த வாறே ” – 17


    இச் சூத்திரம் உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்திற்று.
    மெய்கள் எல்லாம் புள்ளியில்லாத படிக்கு, தத்தமது முன்னை வடிவே பின்னும் வடிவாக, அகரத்துடன் கூடி ஒலித்தலும், ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமாகிய, அவ்விரண்டு இயல்பினையுடைய அவை ஒலிக்கும் முறைமையாம்.

    தமிழ்நெடுங் கணக்கு என்ற தொகை :
    உயிரெழுத்து 12
    மெய்யெழுத்து 18
    உயிர்மெய்யெழுத்து 216
    ஆய்தம் 1

    ஆக. 247

    மயக்கம், பிறநிலை, உடனிலை என இருவகை.

    “அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
    மெய்ம்மயக் குடனிலை தெரியும் காலை ” – 22


    18 மெய்களும் மொழியாக வழங்குமிடத்து மெய்ம் மயக்கம் என்றும் உடனிலை மயக்கம் எனவும் வழங்கும்.
    தனிமெய் பிற மெய்யுடன் மயங்குமாறு:

    “டற லள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத் துரிய ” (23)

    டறலள எனப்பட்ட புள்ளிகளின் முன்னால், கசப என்னும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரியன.

    எ-டு கட்க. கற்க. செல்க. கொள்க. கட்சி செய்ப கொள்ப.

    ” ங ஞ ண ந ம ன வெனும் புள்ளி முன்னர்த் தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே ” (25)

    ஙஞணநமன என்ற புள்ளிகளின் முன்பு தத்தமக்கு மேல் நிற்கும் எழுத்தாகிய கசடதபற க்கள் பொருந்தி மயங்கின.


    எ- டு: தெங்கு மஞ்சு மண்டு, பந்து, கம்பு, கன்று, இவை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆகும்.
    தனிமெய் தன்மெய்யோடு மயங்குவது :(உடனிலை)

    “மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முன் தாம்வரூஉம் ரழலங் கடையே” (30)

    ரழ தவிர்ந்த எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம்வந்து மயங்கும்.
    எ-டு:
    காக்கை எங்ஙனம் பச்சை மஞ்ஞை பட்டை மண்ணை
    தத்தை வெந்நோய் அப்பை அம்மி வெய்யர் பல்லி எவ்வி கொள்ளி கொற்றி கன்னி.
    இங்கு 18 – 2 = 16 எடுத்துக் காட்டுகள் காட்டப்பட்டன காண்க.

    சுட்டு எழுத்துகள் :

    ” அஇஉ அம்மூன்றும் சுட்டு ” (31)

    அ இ உ என்ற மூன்று குற்றெழுத்துகளும் சுட்டெழுத்தாம்.
    எ- டு: அந்த இந்த உந்த
    அவ்வீடு இவ்வீடு உவ்வீடு
    வினாவெழுத்துகள்:

    ” ஆஏஓ அம்மூன்றும் வினா ” – 32

    ஆயின் பவணந்தியார் ஆஎஏஓயா என்பன வினா எழுத்தென்றார்.

    எ- டு :
    அவனா? எவன்? ஏது? மரமோ? யாவை?

    (எ+கா: ரழ தவிர்ந்த எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம்வந்து மயங்கும்.)

    பச்சை மாமலை போல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா அமரரேறே அயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
    (தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம்)

    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
     
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
     
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
     
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
     
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
     
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
     
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

    — நூன்மரபு நிறைவு —

  • Class 1

    வகுப்பு 1
    தலைப்பு: எழுத்திலக்கணம் – ஓரறிமுகம்
    தொல்காப்பியம் – மூன்று அதிகாரங்கள்.
    எழுத்து, சொல், பொருள்.
    அதிகாரத்திற்கு 9 இயல்கள், ஆக 3×9 = 27
    நூற்பாக்கள் 1595 – இளம் பூரணர்.
    நூற்பாக்கள் 1611 – நச்சினார்க்கினியர்.
    இளம்பூரணரின் உரையே 3 அதிகாரங்களுக்கும் கிடைத்துள்ளதனால், 1595 நூற்பாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    எழுத்ததிகாரத்தில் மூன்று பிரிவுகள்:
    எழுத்திலக்கணம், பிறப்பிலக்கணம், புணர்ச்சியிலக்கணம்.
    எழுத்திலக்கணத்தில் நூல் மரபு, மொழிமரபு -2 இயல்கள். 
    பிறப்பிலக்கணத்தில் பிறப்பியல் – 1 இயல்
    புணர்ச்சியிலக்கணத்தில்
    புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் 6 இயல்கள்
    ஆக மொத்தம்:9 இயல்கள்.(எழுத்திலக்கணம்:2, பிறப்பிலக்கணம்:1, புணர்ச்சி:6)
    இவற்றில் முதலில் நூன்மரபு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

    முன்னர் குறிப்பிட்ட எழுத்திலக்கண அறிமுகம் மீள்பார்வை
    நூன்மரபு: நூல் + மரபு.
    விளக்கம்
    எழுத்துகளின் தொகை, வகை, ஒலியளவென்ற மாத்திரை, வரிவடிவம் என்பவற்றுடன் தொடங்குதல் நூன்மரபு.
    இவ்வியலில் எழுத்திலக்கணம் தொகுத்துக் கூறலும் நூன்மரபே.
    எழுத்துகள் ஒலிகளே என்றும், 30 எழுத்தொலிகளை உயிர், மெய் எனப் பிரிக்கலாம் என்றும்,
    உயிரில் குற்றெழுத்து 5, இவற்றுக்கு மாத்திரை 1 என்றும்,
    நெட்டெழுத்து 7, மாத்திரை 2 என்றும்,
    மெய்யெழுத்துகள் 3 வகை, இவற்றுக்கு மாத்திரை 1/2 என்றும்,
    சார்பொலிகள் (எழுத்துகள்) 3, இவற்றுக்கும் 1/2 மாத்திரை என்றும்,

    உயிர், மெய்களுக்கு இன எழுத்துகள் உள்ளன என்றும், உயிரும் மெய்யும் கூடி வழங்கும் உயிர்மெய் 216. ( 12×18 ) என்றும்,
    ஆய்தம் 1 , ஆக மொத்தம் = 247 என்றும்,
    சுட்டு எழுத்து 3, வினா எழுத்து 5 என்றும்,
    குற்றியலுகரம் 6 வகை என்றும்,
    முற்றியலுகரம் 3 வகை என்றும்,
    மெய்மயக்கம் 2 வகை, உடனிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம்
    என்றும் நூல்மரபு விளக்குகிறது.

    மேலும், எழுத்தின் பெயர், முறை, தொகை, வகைகளுக்கான நூற்பா இது :

    “எழுத்தெனப் படுபஅகரமுதல் னகர இறுவாய்
    முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”
    ( தொல்: எழுத்ததிகாரம்: 1)

    “மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
    எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே”
    ( நன்னூல், எழு: 58)

    சார்பெழுத்தென்பது:

    “அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல் 2)


    “உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள பஃகிய இஉஐஔ
    மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்” ( நன்னூல்: 60)

    உயிரில் குற்றெழுத்து 5, இவற்றுக்கு மாத்திரை 1 என்றும்,
    அ இ உ எ ஒ – 1 மாத்திரை

    நெட்டெழுத்து 7 , மாத்திரை 2 என்றும்,
    ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ – 2 மாத்திரை

    மெய்யெழுத்துகள் 3 வகை, இவற்றுக்கு மாத்திரை 1/2 என்றும்,

    வல்லினம்: க், ச், ட், த், ப், ற்
    மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
    இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்

    சார்பொலிகள் (எழுத்துகள்) 3, இவற்றுக்கும் 1/2 மாத்திரை என்றும்

    Quiz1

    1 / 3

    தொல்காப்பியத்தில் அதிகாரங்கள் எத்தனை?

    2 / 3

    மாத்திரையை அளவிடும் கருவிகள் எவை?

    3 / 3

    ” பன்னீருயிரும் மொழி …… ” — இதை நிறைவு செய்க.

    Your score is

    The average score is 92%

    0%