Literature Name : Yappu

  • Class 18

    இலக்கண வகுப்பு- 18
    தொல்:சொல்: இயல்- 2

    1
    முதலாம் வேற்றுமை:

    இது பெயர், எழுவாய் வேற்றுமை எனவும் பெயர் பெறும். இம் முதல் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை என்பதை மனங் கொள்க.

    ” அவற்றுள்; எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே ” ( 65)

    இ-ள்:
    மேற்சொன்ன வேற்றுமையுள், முதற்கண் பெயர் எனக் கூறப்பட்ட வேற்றுமையானது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலையாம் எ-று

    துணையாய் நிற்கும் நிலையாவது, உருபும் விளியும் ஏற்காமல் பிறிதொன்றனொடு தொகாமல் நிற்கும் நிலையாம்.

    எ-டு:
    இராமன் காடேகினான்
    தொல்காப்பியர் இலக்கணம் செய்தார்.
    மரம் வீழ்ந்தது.

    2
    இவ்வாறு நிற்கும் பெயர்/ எழுவாய் பயனிலைகளை ஏற்கும் என்கிறது இச்சூத்திரம்.

    ” பொருண்மை சுட்டல்
    வியங்கொள வருதல்
    வினைநிலை உரைத்தல்
    வினாவிற் கேற்றல்
    பண்பு கொள வருதல்
    பெயர்கொள வருத லென்று
    அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே “
    (66) ————-

    இ-ள்:
    பொருண்மை சுட்டல் — பசு உண்டு, பசு பெயர்/எழுவாய். உண்டு பொருண்மைப் பயனிலை சுட்டியது.

    வியங்கொள வருதல் — மன்னர் வாழ்க! – ( பெயர்/ எழுவாய், வாழ்க வியங்கொள வந்தது

    வினைநிலை உரைத்தல் —
    பாம்பு சீறியது ( பெயர்/எழுவாய், வினைப் பயனிலை) ———-

    வினாவிற்கேற்றல் — அவன் யார்?

    பண்புகொள வருதல் — கண்ணன் கரியன்

    பெயர்கொள வருதல் — கோணங்கள் பல
    ( வியம் – ஏவல், கட்டளை, கொள்வது கோள்)

    வியங்கோளுக்கு எ-டு:
    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க ….

    ” ஆறிரு தடந்தோள் வாழ்க
    அறுமுகம் வாழ்க வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க
    குக்குடம் வாழ்க செவ்வேள்
    ஏறிய மஞ்ஞை வாழ்க
    யானைதன் அணங்கு வாழ்க
    மாறிலா வள்ளி வாழ்க
    வாழ்கசீர் அடியார் எல்லாம் ” ( அருணகிரியார்)

    வகுப்பு – 18 தொடர்ச்சி:

    3
    பெயர்ச் சொற்கள் பயனிலை கொள்ளும் என்றும், அவை 6 முறைகளில் எவ்வாறு பயனிலை கொண்டன என்றும் சென்ற நூற்பாவிற் கற்றோம். இந் நூற்பாவிலே எழுவாயாக வருகின்ற தொகைப் பெயர்களும் பயனிலை கொள்ளும் என உரைக்கிறார்,

    ” பெயரினாகிய தொகையுமா ருளவே
    அவ்வு முரிய அப்பா லான ” ( 67)

    இ-ள்:
    பெயரும் பெயரும் தொக்க தொகையுமுள, அவையும் உரிய எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்கு எ-று

    பெயர் தனியாக வருவது மட்டுமன்றி, பெயரும் பெயரும் சேர்ந்து வரும் தொகைச் சொற்களும் உள. இவையும் எழுவாய் வேற்றுமைக்குரிய பயனிலைகளைப் பெற்று வரும்.

    எ-டு:

    யானைக் கொம்பு. தமிழ்த்தாய், தமிழ்இலக்கியம்.

    4
    அடுத்து எழுவாய், தோன்றா எழுவாய் பற்றிப் பார்ப்போம்.
    எழுவாய் என மட்டும் கூறின் அது ‘ தோன்றிய எழுவாய் ‘,
    எழுவாய் தோன்றவில்லை
    என்றால் அது ‘ தோன்றா எழுவாய் ‘ எனவறிக.

    ” எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
    அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப ” ( 68) …………………

    இ-ள்:
    மூன்றிடத்துப் பெயரும் செவிப்புலனாகத் தோன்றி நின்று பயனிலை கோடல் செவ்விது என்பர் ஆசிரியர் எ-று

    இங்கு ‘ பெயர் ‘ என்றது எழுவாயை, ‘ அவ்வியல் ‘ என்றது பயனிலையை எனவுணர்க.

    எ-டு:
    ” தில்லைக்குச் செல்வாயா? ” செல்வேன் “
    இங்கு நீ, நான் என்பன தோன்றா எழுவாயாக நின்றன.

    அப்பர் சுவாமிகள், 6 ஆம் திருமுறையின்கண்:

    ” முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
    மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
    அன்னையையு மத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார்
    ஆசாரத்தை
    தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே ” ——-

    5
    இங்கு பெயர்ச் சொல்லினது விசேட இயல்பைக் கூறுகிறார்.

    ” பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
    தொழில்நிலை யொட்டும்
    ஒன்றலங் கடையே “
    ( 70)
    இ-ள்:
    பெயர்ச் சொல்லானது காலந் தோன்ற வராது. வினைச் சொல்லோடு ஒக்கும் ஒரு கூறல்லாத
    விடத்து எ-று
    அதாவது தனித்து வரும் பெயர்ச் சொல் காலங் காட்டாது, ஆயின் தொழிலொடு இணைகையில் காலந் தோன்றும்.

    எ-டு:

    சுந்தரன், அபிராமி, அழகன், அழகி — இங்கு காலம் காட்டவில்லை.

    சுந்தரன் உண்டான், அபிராமி ஆடினாள்- இங்கு காலம் காட்டியது.

    ‘ தொழில்நிலை ஒட்டும் ‘ என்றது வினையாலணையும் பெயரையாம் எனவறிக.

    எ-டு:
    உண்டவன், நடந்தவன், ஆடியவள், ஆடியவன்.

    சம்பந்தர் தேவாரம்:

    ” எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால்
    ஏத்திட வாத்தமாம் பேறு
    தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும்
    இறப்பறி யாதவர் வேள்வி
    தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
    தன்னருட் பெருமையும் வாழ்வும்
    கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர்
    கோணமா மலை அமர்ந்
    தாரே “

    வகுப்பு – 18 நிறைவு

  • Class 17

    இலக்கண வகுப்பு -17
    தொல்:சொல்: கிளவியாக்கம், இயல் 1(தொடர்ச்சி)

    1
    இரட்டைக்கிளவி…
    வகுப்பு 16 – சேர்க்கவும்

    2
    இனி, ‘ எண்ணுக்குப் புறனடை ‘ எவ்வாறு அமையும் என்ற விளக்கம் யாது எனப் பார்ப்போம்:

    பன்மை குறித்து நிற்கும் சினைப் பெயர்களை ஒருமையிற் சுட்டும் இலக்கணவியல்பை இச் சூத்திரம் காட்டுகிறது:

    ” கண்ணும் தோளும் முலையும் பிறவும்
    பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
    பன்மை கூறும் கடப்பா டிலவே
    தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே “
    ( 61)

    இ-ள்:
    கண் முதலாகப் பிறவும் பன்மை குறித்து நின்ற சினைநிலைக் கிளவி. அவை பன்மையினாலேயே உணர்த்தப்பட வேண்டும் என்ற கடப்பாடு கிடையாது. முதல் ஒருமையாகவும், பன்மையாகவும் வரலாம் எ-று

    எ-டு:

    கண் அல்லள் – ஒருமை
    கண் அல்லர் – பன்மை
    இரு கூற்றிலும் ‘ கண் ‘ என்றே வந்தது. ஆகவே கண், தோள், முலை, கை, கால், பாதம், புருவம், காது ஆகிய இரண்டாகவுள்ள பன்மைச் சினைக் கிளவிகளை ஒருமையில் இசைப்பது வழுவல்ல எனத் தொல்காப்பியர் வழுவமைதி அமைத்துள்ளார்.

    1– சேந்தனார், திருவிசைப்பா:
    ” கற்றவர் விழுங்கும்….
    கண்டு கண்டுள்ளம் குளிர
    என் கண் குளிர்ந்தனவே”

    2
    கம்பநாடனும், மிதிலைக் காட்சிப் படலத்திலே
    ” தோள் கண்டார் தோளே கண்டார்
    தொடு கழல் கமலம் அன்ன
    தாள் கண்டார் தாளே கண்டார்
    தடக்கை கண்டாரும் அஃதே
    வாள் கொண்ட கண்ணார் யாரே
    வடிவினை முடியக் கண்டார்….”

    3
    ஞானசம்பந்தப் பெருமான், திருவண்ணா மலைத் திருப்பதிகம்:
    ” உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் …”

    4
    காரைக்காலம்மை, திருவாலங்கான்டுத் திருப்பதிகத்திலே;

    ” கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண்
    வெண்பற்குழி….புழுதி துடைத்து முலை கொடுத்து…. அப்பன் இடம் திருவாலங் காடே “

    — கிளவியாக்கம் நிறைவு —

    அடுத்து, சொல்லதிகாரம் – இயல் 2,

    ‘ வேற்றுமையியல் ‘

    ஏற்கனவே எழுத்ததிகார விளக்கங்களிலே ஆங்காங்கே பார்த்தோம். ஆயினும் இது ஒரு தனி இயலாகத் தொல்காப்பியர் அமைத்துள்ளார். மேலும் அடுத்து வரும் இயல்களான வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய இயல்களிலும் வேற்றுமை பற்றியே அவர் விளக்குகிறார்.

    1
    பெயர்கள் உருபுகளை ஏற்றுப் பொருள் வேறுபடுதல் ‘ வேற்றுமை ‘ என அறிகிறோம். ஒரு வேற்றுமைச் சொல்லில் உருபு, அது கொள்ளும் பெயர், அது கொண்டு முடியும் வினைச்சொல் ஆகிய மூன்னும் சேர்ந்திருக்கும்.

    ” வேற்றுமை தாமே ஏழென மொழிப “( 62)
    இ-ள்:
    வேற்றுமையாவன ஏழென்று சொல்வர் எ-று

    2
    அடுத்த சூத்திரத்திலே அவை எட்டு என்கிறார்.

    ” விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே ” (63)

    இ-ள்:
    விளி கொள்வதன் கண்ணதாகிய விளியோடு வேற்றுமைகள் எட்டாம் எ-று

    விளி வேற்றுமை என்பது திரிந்தும், இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி ஆகும்.

    3
    எட்டு வேற்றுமைகளின் பெயர்கள் யாவை என்பதை இச் சூத்திரம் உரைக்கிறது :
    ” அவைதாம்;
    பெயர் ஐ ஒடு கு இன் அது
    கண்விளி யென்னும் ஈற்ற”

    இ-ள்:

    எட்டெனப்பட்ட வேற்றுமையாவன விளி வேற்றுமையை இறுதியாகவுடைய பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண்ணாம் எ-று-

    –இவ்வகுப்பு நிறைவு –

  • Class 16

    இலக்கண வகுப்பு – 16
    தொல்:சொல்: (சேனாவரையம்) கிளவி யாக்கம் ( தொடர்ச்சி) :
    1
    சென்ற வகுப்பில் ஆணறி சொல், பெண்ணறி சொல், பலவோரறி சொல், ஆணறி சொல்லிறுதி, பெண்ணறி சொல்லிறுதி, பலவோரறி சொல்லிறுதி, பால் வேறுபாடுகள், ஒன்றன் பாலிறுதி என்பன பற்றிக் கற்றோம்,
    இப்போது பலவின் பாலீறுகளைப் பார்ப்போம்:
    2
    ” அஆவ எனவரூம் இறுதி அப்பால் மூன்றே பலவறி சொல்லே ” ( 9-492 )
    இ-ள்:
    பலவறி சொல்லாவன அ ஆ வ எனவரும் இறுதியை உடைய அக்கூற்று மூன்றேயாம் எ-று
    எ-டு:
    பறவைகள் உண்டன ( அ )
    புலிகள் புல் உண்ணா ( ஆ )
    ஆடுகள் கீரை உண்குவ ( வ )- இது பண்டைய வழக்கு, இன்று ‘ ஆடுகள் கீரை உண்பவை ‘ என வழங்கும். வ என்றது வை ஆகி ஒரே வர்க்கமானது காண்க.
    அ ஈறு–
    ‘ கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை..’
    (திருப்பள்ளியெழுச்சி/மணிவாசகர். ஓவின – மங்கின)
    ஆ ஈறு– வாரா போகா
    ” வருந்தி யழைத்தாலும் வாராத வாரா
    பொருந்துவன போமினென்றாற் போகா —- இருந்தேங்கி
    நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து
    துஞ்சுவதே மாந்தர் தொழில் ” ( நல்வழி -5)
    வ ஈறு — கம்பன், பால காண்டம், நாட்டுப்படலம்:
    ” தாமரைப்படுவ வண்டும்
    தகைவரும் திருவும் தண்தார்க்/ காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன்அம்பும்/ மாமுகிற் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்/ நாமுதற் படுவ மெய்யும் நாமநூல் பொருளு மன்னோ “
    (படுவ – தங்கும், அணையும். வாரி – கடல்.
    வயங்கு – ஒளிவிளங்கு)
    3
    இதுவரை கற்ற ன் ள் ர் ப மார் து று டு அ ஆ வ ஆகிய 11 ஈற்றெழுத்துகள் வினை ஈறுகளாகவும் வரும் என்பதை அறிந்து கொள்க.
    4
    இனி இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்பன பற்றி நோக்குவோம்:
    ” தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
    பகுதிக் கிளவி வரைநிலை யிலவே “
    (17-500)
    இ-ள்:
    தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் நடக்கும் இலக்கணத்தில் பக்கச் சொல் கடியப்படா எ-று
    தகுதி வழக்கு :
    ஒரு பொருளை அதற்குரிய சொல்லால் சொன்னால் அது தகுதியடையதல்ல எனக் கருதி, தகுதியுடைய வேறொரு சொல்லால் சொல்லுதல் ” தகுதி வழக்கு ” ஆகும். இது 3 வகைப்படும்.
    1
    மங்கலம் — செத்தாரைச் துஞ்சினார் என்றல்
    2
    இடக்கரடக்கல் — மலங்கழுவுதலைக் கால் கழுவுதல் என்றல்
    3
    குழூஉக் குறி — வேடர் கள்ளை ‘ சொல்விளம்பி ‘ என்றல், பொற்கொல்லர் தங்கத்தைப் ‘ பறி ‘ என்றல்.
    இயல்பு வழக்கு :
    ஏதாவது ஒரு பொருளுக்கு இயல்பாகவே அமைந்த சொல்லால் வழங்குவது
    ‘ இயல்பு வழக்கு ‘ ஆகும்.
    இதுவும் 3 வகையாகும்.
    1
    இலக்கணமுடையது:
    நிலம் நீர் தீ வளி வெளி
    2
    இலக்கணப் போலி:
    இல்முன் – முன்றில். மயல் – மையல்
    3
    மரூஉ :
    சோழநாடு – சோணாடு
    தஞ்சாவூர் – தஞ்சை
    தெங்கங்காய் – தேங்காய்
    பருத்தித்துறை – பருத்துறை
    5
    அடுத்து ‘ சினைமுதற் சொற்கள் ‘ அமையும் முறை பற்றி இச் சூத்திரம் உரைக்கிறது:
    ” இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு
    வினைப்படு தொகுதியின்
    உம்மை வேண்டும் “
    (33-
    இ-ள்:
    கேட்போரான் இத்துணை என்று அறியப்பட்ட சினைக் கிளவிக்கும், முதற் கிளவிக்கும் வினைப்படு தொகுதிக் கண் உம்மை கொடுத்துச் சொல்லுக எ-று
    எ-டு:
    ஔவையின் ‘ விநாயகர் அகவல் : சீதக்களபச் …
    ” பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் திரண்ட முப்புரிநூல் திகழ்
    ஒளி மார்பும் ……….”
    (இங்கு சினைக் கிளவிக்கும், முதற் கிளவிக்கும் ‘ உம் ‘ மை கொடுத்து ஔவைக் கிழவி பாடியுள்ளமை வியப்பாக உள்ளதல்லவா? )
    -மிகுதி வரும் –
    மேலும் ‘ முதற் கிளவிக்கு ‘ உம்மை சேர்த்த ஔவைக் கிளவியின் அதிசயத் தமிழைச் சுவைப்போம்!
    ” பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
    நாலும் கலந்துனக்கு நான் தருவேன் — கோலஞ்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா “
    ( மேலும் உலகில் இல்லாத பொருளைக் குறித்துச் சொல்லும் போதும் உம்மை வரும் என்கிறார் தொல்காப்பியர்.
    எ-டு:
    குருடு காண்டல் பகலிலும் இல்லை, முயற் கொம்பு உலகெங்கும் கிடையா, குதிரைக் கொம்பு தேடினும் வரா. )
    6
    தொடர்ந்து, வேறுபட்ட வினைகளையுடைய பொருளை பொதுவான ஒரு சொல் கொண்டு குறிக்கலாம்.
    ” வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை
    கிளவார் ” ( 46-
    இ-ள்:
    வேறுபட்ட வினைகளையுடைய பல பொருட்கு பொதுவாகிய சொல்லை ஒன்றற்குரிய வினையாய்க் கொள்ளார், அதாவது பொது வினையாகக் கொள்வார் என்பது பெறப்பட்டது.
    எ-டு:
    அடிசில் அயின்றார். அடிசில் = உணவு. ஓர் உணவானது உண்ணல், தின்னல், பருகுதல், நக்குதல் ஆகிய நான்கு வினைகளுக்கு உரியதாகும். இந் நால்வகை வினைகளை ஒன்றாகச் செய்வதையே
    ‘ அயின்றார் ‘ என்ற சொல் குறிக்கும். இது பொதுச் சொல்லாகும்.
    ஆக ” அயின்றேன் ” என்று சொன்னால், ஒரு உணவை அந்நாலுவகை வினையினாலும் சாப்பிட்டேன் என்பது பொருளாகும். ஆக அயின்றேன் என்று கூறாது ஒரு/இரு வினைகளை மட்டும் கூறுதல் வழுவாகும் என்றார் தொல்காப்பியர்.

    — இவ் வகுப்பு நிறைவு –
    ஐயா, ஔவைக்கு ‘ கிழவி ‘ எனக் குறிக்கவும், நன்றி

  • Class 15

    இலக்கண வகுப்பு – 15
    தொல்:சொல்லதிகாரம், இயல் 1, ‘ கிளவியாக்கம் ‘
    எழுத்ததிகாரத்தை நிறைவு செய்த தொல்காப்பியர், அடுத்து சொல்லதிகாரத்தை ஆரம்பம் செய்கிறார்.
    இதில் 463 நூற்பாக்களுள்ளன. சொல்லதிகாரத்தின் 9 இயல்களில், முதல் 4 இயல்களும் தொடர் இலக்கணத்தையும், அடுத்த 4 இயல்களும் தனிச் சொற்களின் இலக்கணத்தையும், 9 ஆவது இயலானது முதலெட்டு இயல்களிலும் சொல்லாமல் விடப்பட்ட இலக்கணங்களையும் எடுத்து விளக்குகின்றன. Copied

    ” எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ” என்கிறார் தொல்காப்பியர். சொல் என்பது எழுத்தொடு புணர்ந்து, பொருள் அறிவுறுத்தும் ஓசை என்கிறார் இளம்பூரணர்.

    சொல்லுக்கு, மொழி கிளவி எனப்பல பெயர்களுள. இச் சொற்கள் எவ்வாறு ஆக்கப்படுகின்றன என்பதை விளக்குதலால், இவ்வியலுக்கு ‘ கிளவி யாக்கம் ‘ எனப் பெயர் ஆயிற்று. மொழியின் பயன்பாட்டுக்கேற்பச் சொற்களை ஆக்கிக் கொள்வது அல்லது இயற்றிக் கொள்வதே’ கிளவியாக்கம் ‘ எனப்படுகிறது. எனவே எழுத்துகளைக் கொண்டு பொருள் தருகின்ற சொற்களை ஆக்கிக் கொள்ளுதலே ‘ கிளவியாக்கம் ‘ எனத் துணியலாம். Copied

    ” நொய்யும் (தவிடு), நுறுங்கும் (குறுணை) நீக்கி அரிசி ஆக்கினாரை ‘அரிசி ஆக்கினார் ‘ என்பது போல, குற்றம் களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையால், இது
    ‘ கிளவியாக்கம் ‘ ஆயிற்று என்பார் சேனாவரையர்.
    ஆகவே பிழையற்ற சொற்களைக் கொண்டு, பிழையற்ற சொற்றொடர்களை ஆக்கிக் கொள்வதே கிளவியாக்கம் என மேலும் மொழியலாம்.
    ஆதலால் வழுநிலை, வழாநிலை, வழுவமைதி நிலை என மூன்று நிலைகளையும் இவ்வியல் எடுத்தியம்புகிறது. Copied
    1
    திணை:
    இரு முக்கிய திணைகளாகிய உயர்திணை, அஃறிணை பற்றி இங்குரைக்கிறார்.

    ” உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
    அஃறிணை என்மனார் அவரல பிறவே
    ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே “
    ( 1- 484) copied

    இ-ள்:
    மக்கள் என்று கருதப்படும் பொருளை உயர்திணை என்று சொல்வர், மக்கள் என்று கருதப்படாத பிற பொருளை அஃறிணை என்று சொல்வர். அவ்விரு திணைமேலும் சொற்கள் நிகழும் எ-று
    ( திணை என்றால் ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே இது ஒழுக்கமுடைய மக்களையே குறித்தது என்பது இளம்பூரணர் கருத்தாம். ஆதலாலே உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல் என்று குறிக்காது, அஃறிணை உயர்திணை என்று பொருள் கருதி உரைக்கப்
    பட்டது என்பார் சேனாவரையர். திணை குறித்த விளக்கங்களுக்கு
    ‘ பொருளதிகாரம் ‘ பார்க்க) copied

    2
    இங்கு உயர் திணைக்குப் பால் வேறுபாடுகள் மூன்று என மொழிகிறார்.
    ” ஆடூஉ அறிசொல் மகடூஉ
    அறிசொல்
    பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி
    அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே “
    ( 2-485)
    இ-ள்:
    ஆடூஉ என்ற ஆணறி சொல்லும், மகடூஉ என்ற பெண்ணறி சொல்லும், பல்லோர் அறியும் சொல்லொடு பொருந்தி, அம்மூன்று பால் சொல்லும் உயர்திணையனவாம்
    எ- று copied

    ஆடூஉ அறிசொல் — ஆண்பால் சொல்
    மகடூஉ அறிசொல் — பெண்பால் சொல்
    பல்லோர் அறிசொல் — பலர்பால் சொல்.

    எ- டு:
    குமரன் – ஆண்பால்
    குமரி – பெண்பால்
    பிள்ளைகள் – பலர்பால். copied

    3
    ” ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
    றாயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே ” ( 3-486)
    இ-ள்:
    ஒன்றனை அறியும் சொல்லும், பலவற்றை அறியும் சொல்லும் என அவ்விரு சொல்லும் அஃறிணைக்கு உரியனவாம் எ-று
    ஒன்றறி சொல் – ஒன்றன் பாற் சொல்,
    பலவறி சொல் – பலவின் பாற் சொல். copied

    எ-டு:
    மரம் — ஒன்றன் பால்
    மரங்கள் — பலவின் பால்,
    அஃறிணையிலும் ஆண்-பெண் வேறுபாடு உண்டென்பதால், இங்கு பால் கூறினார். ஒருமை/பன்மை என்பது இன்றைய வழக்கு. copied
    4
    ஆண்பாலுக்கு ஈறு சொல்வதிது. பெயர்ச் சொற்கள் பால், திணை போன்றவற்றைத் தெளிவாகப் பல சந்தர்ப்பங்களில் காட்டுவதில்லை என்பதால், இப் பால் அடையாளத்திற்கென ஈற்றெழுத்துகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
    ” ன ஃ கான் ஒற்றே ஆடூஉ அறிசொல் ” ( 5 – 488)
    இ-ள்:
    ன ஃ கானாகிய ஒற்று ஆடூஉ – ஆண் – அறிசொல்லாம் எ-று
    எ-டு:
    உண்டனன், உண்டான், கரியன், கண்ணன், நல்லன் – copied
    5
    அடுத்து, பெண்பாற்கு ஈற்றெழுத்தைச் சுட்டியுரைக்கிறார்.
    ” ள ஃ கான் ஒற்றே மகடூஉ அறிசொல் ” ( 6 – 489)
    இ-ள்:
    ள ஃ கானாகிய ஒற்று மகடூஉ – பெண் – அறி சொல்லாம் எ-று
    எ-டு:
    உண்டனள், உண்டாள், செய்யாள், விழியாள்.
    ” அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்தோம் புவா னில் ” – குறள் – copied

    6
    இங்கு பலர்பால் ஈறுகள் எவை எனக் குறிக்கிறார்.
    ” ர ஃ கான் ஒற்றும் பகர இறுதியும்
    மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
    நேரத் தோன்றும் பலரறி
    சொல்லே ” ( 7 – 490)
    இ-ள்:
    ர ஃ கானாகிய ஒற்றும் பகரமாகிய இறுதியும், மார் என்னும் இடைச் சொல்லும் ஆகிய இம்மூன்றும் பலரறி சொல்லாம் எ- று

    எ-டு:
    உண்டனர், உண்டார், உண்பர், உண்பார், உண்ப, வருப, என்ப, ஐயர்மார், ஆசிரியர்மார்.
    அபி/ அந்தாதிப் பாடலில் இந்த ர் என்ற பலரறி சொல் 10 தடவைகள் வருகின்றன.
    ” வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்/ சிந்திப்பவர் நாற்றிசை நாரணர் சிந்தையுள்ளே / பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னை/ சந்திப்பவர்க் கெளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே “

    வள்ளுவரும்,
    ” கண்என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
    கண்என்ப வாழும் உயிர்க்கு ” ( குறள் – 392)
    ( என்ப – என்பர். இருவழிப் பொருள் கொள்ளலாம்)- copied

    7
    இனி ஒன்றன் பாலீறுகளைக் காட்டுகிறார்:
    ” ஒன்றறி கிளவி தறட ஊர்ந்து
    குன்றிய லுகரத் திறுதி யாகும் ” ( 8-491)
    இ-ள்:
    ஒன்றறி சொல்லாவது தறட என்னும் ஒற்றை ஊர்ந்த குற்றியலுகரத்தை
    இறுதியாகவுடைய சொல்லாம் எ-று

    ஒன்று என்றது ஒருமையை.
    த்+உ = து
    ற்+உ = று
    ட்+உ = டு
    எ-டு :
    யானை பிளிறியது.
    சேவல் கூவிற்று.
    குண்டு கட்டு ( தவளைக் கண்)

    • இவ்வகுப்பு நிறைவு –
  • Class 14

    இலக்கண வகுப்பு – 14
    தொல்:எழு: இயல் 9

    ‘ குற்றியலுகரப் புணரியல்’ தொடர்ச்சி, (எழுத்ததிகாரம் நிறைவுப் பகுதி)

    சென்ற வகுப்பில் குற்றியலுகரப் புணர்ச்சி பற்றியும், எண்ணுப் பெயர்களின் புணர்ச்சி பற்றியும் பார்த்தோம்.

    பத்து என்ற சொல்லுடன் புணரும் எண்ணுப் பெயரொடு இன் சாரியை வருமென்றும், இரண்டுக்கல்ல என்றும் அறிந்தோம்.
    1
    பத்தின் முன் இரண்டு வந்து புணருவதைத் தனியொரு நூற்பாவினால் விளக்குகிறார்.
    ” பத்தனொற் றுக்கெட னகாரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை ” ( 29-435) copied

    இ-ள்:
    ( மேற் சூத்திரத்தில் ‘ இன் ‘ பெறாதென்று விலக்கிய இரண்டு என்ற எண்ணுப் பெயருக்கு தனியே புணர்ச்சி கூறுகிறார்)
    பத்து என்னும் சொல்லின் நின்ற தகர ஒற்றுக்கெட, னகர ஒற்று வந்து இரட்டுதல், இரண்டு என்னும் எண்வரும் காலத்தே பொருந்திற்று எ-று
    எ-டு:
    பத்து + இரண்டு = பன்னிரண்டு copied

    2
    எண்ணுப் பெயரோடு பத்து என்ற குற்றுகரம் எவ்வாறு பொருந்தி நின்றது என்பதைக் கூறுகிறார்:
    ” ஒன்று முதலொன்பான் இறுதி முன்னர நின்ற பத்த னொற்றுக் கெட வாய்தம் வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப கூறிய இயற்கைக் குற்றியலுகரம் ஆற னிறுதி அல்வழி யான ” ( 32-438)
    இ-ள்:
    ஒன்று முதலாக ஒன்பது ஈறாகச் சொல்லப் படுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், வருமொழியாய் வந்த பத்து எனும் சொல்லினது தகர ஒற்றுக்கெட, ஆய்தமானது வந்து இடையில் நிலை பெறும்.
    அல்லாதவிடத்து குற்றியலுகரம் மேற்கூறிய மெய்யொடும் இயற்கையாய்க் கெட்டு முடியும். எ-று

    எ-டு:
    ஒன்று+பத்து= ஒருப ஃ து
    இருப ஃ து, முப்ப ஃ து

    அல்வழிப் புணர்ச்சியில்,
    ஒன்று+பத்து= ஒருபது, இருபது,முப்பது
    (அருணந்தியாரின் நூலுக்கு ‘ இருபா இருப ஃ து ‘ என்று பெயர்) copied

    3
    எட்டு என்ற எண் புணருமாறு :
    ” எட்டன் ஒற்றே ணகார மாகும் ” ( 38- 444 )
    இ-ள்:
    எட்டு என்ற எண்ணின் கண் நின்ற டகாரவொற்று ணகார ஒற்றாய் முடியும்.

    எ-டு:
    எட்டு+பத்து= எண்பது
    எட்டு+குணம்= எண்குணம்
    எட்டு+திசை=
    எண்தி (டி) சை
    எட்டு+சித்தர்= எண்சித்தர்
    ஐயன் வள்ளுவனாரும்,

    ” கோள்இல் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை “
    இ-ள்:
    கொள்வது கோள். இவ் வேர்ச் சொல்லிலிருந்தே
    ‘ கொள்கை ‘ என்ற சொல் பிறந்தது. இல் — இல்லாமை. பொறியில் — இங்கு வந்த இல் இடப் பொருளில் 5 ஆம் வேற்றுமையில் வந்தது காண்க. Copied

    4
    மேலும் சில எண்ணுப் புணர்ச்சிகளைச் சுருக்கம் கருதி, சூத்திரங்களைச் சுட்டாது, புணருமாற்றைத் தருகிறேன்:

    ஒன்று+ஆயிரம்= ஓராயிரம்,

    இரண்டு+ஆயிரம்= ஈராயிரம்

    மூன்று+ஆயிரம்= மூவாயிரம், முவ்வாயிரம்

    நான்கு+ஆயிரம்= நாலாயிரம், நான்காயிரம்

    ஒன்பது+ஆயிரம்= ஒன்பதினாயிரம் ( இன் சாரியை)

    நூறு+ஒன்று= நூற்றொன்று copied

    5
    இரண்டு முதல் ஒன்பது எண்ணின் முன் ” மா ” என்னும் சொல் வருமாறு:

    ‘மா’ என்பது பண்டைய அளவீட்டுச் சொல்.

    ஒன்று+மா = ஒருமா
    இரண்டு+மா = இருமா
    மூன்று+மா= மும்மா copied

    இச் சொற்களையும், ஏனைய சில அளவுச் சொற்களையும் வைத்துக் காளமேகப் புலவர் சிலேடை வெண்பா பாடியுள்ளார்:

    ” முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
    அக்கா லரைக்கால் கண்டஞ்சாமுன் — விக்கி
    இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
    ஒருமாவின் கீழரையின் றோது “

    வெளிப்படையான கருத்து தெரிந்தது.
    மறைபொருள் :
    முக்கால் — மூன்றாவது காலாகிய ஊன்றுகோல்
    முன்னரை — முடி முன்பக்க நரை
    அக்காலரை — அக்+கால்+அரை ( அக் காலனான எமனை)
    கால்அஞ்சா — கால்கள் அஞ்சி நடுங்காமல்
    இருமாமுன் — இருமி உயிர்விட முன்
    மாகாணிக்கு – சுடலைக்கு
    ஒருமா – ஒற்றைமான் copied

    அளவீடுகள் :
    முக்கால் – 3/4
    முன் அரை — 1/2
    காலரைக்கால் — 3/8
    இருமா — 1/10
    மாகாணி — 1/16
    ஒருமா — 1/20 copied

    6
    இது எழுத்ததிகாரத்தின் இறுதிச் சூத்திரமாகும்:
    இதில் எழுத்ததிகாரத்திற்குப் புறநடை சொல்கிறார்:
    ” கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர் ” ( 77-483)
    இ-ள்:
    முதல் எடுத்தோதிய அல்லாதன செய்யுளிடத்து
    வேறுபட வருவனவற்றையும், வழக்கு நடத்துமிடத்து மருவுதலோடு வேறுபட வருவனவற்றையும், முன்பு சொன்ன முடிபியற்கையின் வேறுபடத் தோன்றின், நல்லறிவின் ஆராய்ச்சியினால் வழக்கு இயலுமிடத்து, அவற்றின் முடிபு வேறுபாடுகளை அறிந்து நடாத்துக எ–று
    — எழுத்ததிகாரம் முற்றிற்று —

  • Class 13

    இலக்கண வகுப்பு – 13
    தொல்: எழு: இயல் -9

    ‘ குற்றியலுகரப் புணரியல் ” 18-02-26

    இது எழுத்ததிகாரத்தின் இறுதி இயலாகும். குற்றியலுகர ஈறுகளுக்குரிய புணர்ச்சி இலக்கணம் இங்கு விளக்கப்படுகிறது. குற்றியலுகரம் நிலைமொழியாயிருந்து, வருமொழிகளுடன் புணரும் இயல்புகளை இங்கு நாம் கற்கலாம். இதில் 77 நூற்பாக்கள் காணப்படுகின்றன.
    1
    குற்றியலுகரங்கள் பற்றி நாம் முன்பே கற்றிருக்கிறோம். அவை 6 வகைகளாகும், அவற்றின் பெயர், முறை, தொகை பற்றித் தலைச் சூத்திரம் உரைப்பதைப் பார்ப்போம்.

    ” ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
    ஆய்தத் தொடர்மொழி
    வன்றொடர் மென்றொடர்
    ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன் ” ( 1-407)

    இ-ள்:
    இரண்டெழுத்தாலாகிய ஒருமொழியும், உயிர்தொடர்மொழியும், இடைதொடர்மொழியும், ஆஃதத் தொடர்மொழியும், வன்தொடர்மொழியும், மென்தொடர்மொழியும் ஆகிய அவ்வாறும் உகரம் குறுகிவரும் இடனாம் எ-று

    எ-டு:
    ஏற்கனவே பார்த்தவற்றை இப்போது மீட்டிப் பார்ப்போம்.
    நாகு – ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரம்
    வரகு – உயிர்தொடர் குற்றியலுகரம்
    தெள்கு – இடைதொடர் குற்றியலுகரம்
    எஃகு – ஆய்ததொடர் குற்றியலுகரம்
    கொக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம்
    குரங்கு – மென்றொடர்க் குற்றியலுகரம்

    2
    அவற்றுள், ஈரொற்று வரும் தொடர்களின் நிலை யாது?
    ” அவற்றுள், ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத் தொடராகா ” ( 2-408)

    இ-ள்:
    ஈரொற்றுகள் வருந் தொடர்கள் இடைத் தொடர்கள் ஆகாது. ( அவற்றை வன்றொடர், மென்றொடர் குற்றியலுகரமாகவே கொள்ளுதல் வேண்டும்)

    எ-டு:
    ஈர்க்கு, மொய்ம்பு ( தோள்வலிமை, வீரம்)
    இந் நிலையிலும் உகரம் 1/2 மாத்திரை குறுகி ஒலிக்கும்.

    3
    அடுத்து, குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி ஒன்றினை ஆசிரியர் சுட்டுகிறார்:
    ” வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் “
    ( 15-421) copied

    இ-ள்:
    வண்டு எனும் சொல்லும் பெண்டு எனும் சொல்லும்
    ‘ இன் ‘ சாரியையைப் பொருந்தும் எ-று

    இவ்விரண்டும் மென்றொடர்க் குற்றியலுகரங்களாகும்.

    எ-டு:
    வண்டு+கால்= வண்டின் கால்
    பெண்டு+கண்= பெண்டின் கண்
    வண்டு+சிறகு= வண்டின் சிறகு
    பெண்டு+சேலை= பெண்டின் சேலை
    ( இன்றைய வழக்கில்
    பெண்+கண்= பெண்ணின் கண் பெண்+சேலை= பெண்ணின் சேலை. ஆயினும் இன் சாரியை மாறாமல் வந்தமை காண்க ) copied

    4
    இனி, ஆங்கு யாங்கு முதலிய மென்றொடர்க் குற்றியலுகரங்களின் புணர்ச்சி விதி கூறுகிறார்:

    ” சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்
    யாவினா முதலிய மென்றொடர் மொழியும்
    ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை “
    ( 22-428)
    மேலும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச் சொற்கும் இது முடிபாம், copied

    இ-ள்:
    சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர் மொழிக் குற்றியலுகர ஈறும், யாவென்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வல்லெழுத்து இயற்கையாகிய அவ்வியல்பில் திரியாது முடியும் எ-று copied

    எ-டு:
    ஆங்கு+கொண்டான்= ஆங்குக் கொண்டான்
    ஈங்கு+கொண்டான்= ஈங்குக் கொண்டான்
    ஊங்கு+கொண்டான்= ஊங்குக் கொண்டான்

    அவ்வாறே யாங்குக் கொண்டான் ? என வினாவாகவும் ஒலிக்கும்.
    அங்கு ஆங்கென்றும், இங்கு ஈங்கென்றும், உங்கு ஊங்கென்றும் முதல்நீண்டு வந்தன. copied

    இதனைக் கவிச்சக்கரவர்த்தி தனது கவியிலே காட்டுகிறார் :

    அங்கு, இங்கு என்ற சுட்டுச் சினைச் சொற்களை அடுத்து, வல்லினம் வருமொழியாக வர, அவ்வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியை கம்பன் காட்டுகிறான்.

    அகலிகை சாபவிமோசனப் படலம், பால காண்டம். கல்லாய்க் கிடந்த அகலிகை மீது இராமனின் பாததூளி பட்டதும், அவள் உயிர் பெற்றெழுகிறாள். இது கண்ட விசுவாமித்திர முனிவன் இவ்வாறு கூறுகிறான் : copied

    ” …மை வண்ணத் தரக்கி போரில்
    மழை வண்ணத் தண்ணலே யுன்
    கை வண்ணம் அங்குக் கண்டேன்
    கால் வண்ணம் இங்குக் கண்டேன் ..” copied

    தொடர்ச்சி …
    5
    ‘ பத்து ‘ என்ற குற்றியலுகர ஈற்றுப் பெயர் ( எண்ணுப் பெயர்) புணர்ச்சி பற்றியது இது:

    ” ஒன்று முதலாக எட்ட னிறுதி எல்லா வெண்ணும் பத்தன் முன்வரின் குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே முற்ற இன் வரூஉம் இரண்டலங் கடையே “
    ( 28-434) copied

    இ-ள்:
    ஒன்று என்னும் சொல் முதலாக, எட்டு என்னும் சொல் இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப் பெயரும், பத்து எனும் எண்ணுப்பெயர் முன்வரின், அப் பத்து எனும் சொல்லின் குற்றியலுகரம் மெய்யொடும் கெட்டு முடியும். இரண்டாம் எண்ணுப் பெயரல்லாத எண்ணுப் பெயரிடத்து முடிய, இன் வந்து புணரும் எ-று copied

    எ-டு:
    பத்து+இன்+ஒன்று= பதினொன்று, இவ்வாறு இரண்டு தவிர்த்து எட்டுவரை ஒட்டுக.

    பண்டைத் தமிழ் வழக்கின் படி, இவ்வெண்ணுப் பெயர்கள் ‘ இற்று ‘ சாரியை பெற்று வழங்கின. பத்து ‘ இன் ‘ சாரியை பெற்று வந்தமை போலவே, ‘ இற்று ‘ சாரியையும் பெற்று வழங்கலாயின. Copied

    எ-டு:
    பத்து+ஒன்று= பதிற்றொன்று. இங்கு இற்று சாரியை பெற்றது.
    பத்து+பத்து= பதிற்றுப் பத்து. பின்னர் பப்பத்து என வழங்கவாரம்பித்தது.

    மேலும் பதிற்றொன்று, பதிற்றிரண்டு, பதிற்றுமூன்று, பதிற்றுநான்கு, பதிற்றைந்து, பதிற்றாறு, பதிற்றேழு, பதிற்றெட்டு, பதிற்றொன்பது என வழங்கலாயின. Copied

    ( சங்கத் தொகை இலக்கிய நூல்களாவன பத்துப்பாட்டும், எட்டுத் தொகையுமாம். இவ் வெட்டுத் தொகை நூல்களுள் ‘ பதிற்றுப் பத்து ‘ என்ற நூலும் ஒன்றாகும். சேர மன்னர்களின் வரலாறுகளைப் பத்துப் பத்தாக, பத்து கொண்டதனால், இதற்குப்
    ‘ பதிற்றுப் பத்து ‘ என்று பெயரானது. ஆக 10×10 = 100 பாடல்களைக் கொண்டது. ( எட்டுத் தொகை நூல்கள் = நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு )

    — இவ் வகுப்பு நிறைவு)

  • Class 12

    இலக்கண வகுப்பு – 12
    தொல்: எழு: இயல் 8, புள்ளி மயங்கியல்11/02/26

    சென்ற வகுப்பிலே உயிர் மயங்கியலை நிறைவு செய்தோம். இன்று 8 ஆவது இயலான
    ‘ புள்ளி மயங்கியலை’ ஆரம் பிக்கிறோம்.

    இவ்வியலில் 110 நூற்பாக்களுள்ளன. சொற்களின் ஈற்றில் நிற்கும் மெய்யெழுத்துகளான ஞ் ண் ந் ம் ன் மெல்லினங்களும், ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய இடையினங்களும், எவ்வாறு புணர்கின்றன என்று தொல்காப்பியம் விளக்கிச் செல்கிறது. ஆக. இப் 11 மெய்யீறுகளுள் சில முக்கியமானவை புணரும் முறையை இப்போது காண்போம்: (slide1) copied

    1
    வேற்றுமையில் ணகரவீறு வருமாறு காட்டுகிறார்.
    ” ணகார இறுதி வல்லெழுத் தியையின்
    டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே ” ( 7-303)

    இ-ள்:
    ணகாரவீற்றுப் பெயர் வல்லெழுத்தான முதலெழுத்தோடு இயையின் வேற்றுமைப் புணர்ச்சியின்கண் டகாரமாய் முடியும் எ-று (slide2)

    எ-டு:
    மண்+குடம் = மட்குடம்
    மண்+சாடி = மட்சாடி
    மண்+தூதை = மட்தூதை
    மண்+ பாண்டம் = மட்பாண்டம் (slide 3)

    2
    இங்கு மகரவீறு முன் வல்லினம் மிகும் வழி சொல்கிறார்:
    ” மகர இறுதி வேற்றுமை ஆயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே “( 15-311)

    எ-டு:
    மரம்+கொப்பு = மரக்கொப்பு
    மரம்+செதிள்= மரச்செதிள் (slide3) copied

    3
    அகம் என்ற மகரவீறின் முன் கை வரும்போது புணரும் வகை இவ்வாறு வரும்:
    ” அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
    முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்
    வரைநிலை யின்றே யாசிரியர்க்கு
    மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான ” ( 20-316)

    இ-ள்:
    அகமென்னும் சொல்லிற்கு கை எனும் சொல் முன்வரின், முன்னின்ற அகரம் கெடாது நிற்க, அதன் முன்னின்ற ககரமும் மகரவொற்றும் கெட்டு முடிதலும், கெடாது முடிதலும் ஆசியர்க்கு நீக்கும் நிலைமை இல்லை, அவை கெட்டவழி மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று (slide4) copied

    எ-டு:
    அகம்+கை = அங்கை/அகங்கை

    அப்பர் சுவாமிகள் குறுந்தொகையில்,

    ” குசையும் அங்கையில் கோசமும் கொண்டஅவ்
    வசையின் மங்கல வாசகம் வாழ்த்தவே…”
    என்றருளுகிறார். -copied

    திருச்செந்தூர்த் திருப்புகழும்
    ” அங்கை மென்குழ லார் வார்போலே சந்தி நின்றய
    லோடே போவார் …”
    என்கிறது.

    அபிராமி அந்தாதியும்

    ” ஆத்தாளை …ஐங்கணைப்
    பாசாங்குசமும் கரும்பு வில்லும் அங்கை சேர்த்தாளை ….என மொழிகிறது. (slide5)

    4
    ‘ இலம் ‘ முன் ‘ படு ‘ ( பாடு) என்ற புணர்ச்சி நிலை கூறியது இது :
    ” இலமென் கிளவிக்குப் படுவருகாலை
    நிலையலும் உரித்தே
    செய்யு ளான ” ( 21-317)

    இ-ள்:
    இலம் என்ற சொல்லிற்கு படு எனும் சொல் வருமொழியாய் வருங் காலத்தே, முன் சொன்னவாறே, செய்யுட்கண் மகரவீறு கெடாது நின்று முடியும் எ-று slide 6 copied

    எ-டு:
    இலம்+படு = இலம்படு (இல்லாமை, வறுமை)
    சிலப்பதிகாரத்திலே இளங்கோவடிகள் இம் மொழியைக் கையாள்கிறார்:
    ” ….யாவும் சலம்புணர் கொள்கைச் சலதி யொடாடி, குலந்தரு வான்பொருள் குன்றந் தொலைந்த
    ‘ இலம்பாடு ‘ நாணுத் தரும்
    எனக்கு என்ப
    நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி ‘ சிலம்புள கொண்ம் ‘ என ..”
    ( கொண்ம் என்றது மகரக் குறுக்கம். கொள்ளும் என்பது பொருள், மருளும் என்றது மருண்ம் என்றது போல) (slide 7) copied

    5
    ‘ ஆயிரம் ‘ என்ற எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி:

    ” அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
    ஒத்த எண்ணு முன்வரு காலை ” ( 22-318)

    இ-ள்:
    ஆயிரம் என்னும் எண்ணுப் பெயரின் மகரமெய் தனக்கு ஒத்த மொழியாய் பொருந்தின எண்ணுப் பெயர் தம்முன் வருங்காலை, ‘ அத்து ‘ சாரியை பெற்று வரும் எ-று (slide8)

    எ-டு:
    ஆயிரம்+ஒன்று = ஆயிரத்தொன்று, இவ்வாறே ஆயிரத்திரண்டு, மூன்று எனவொட்டுக.

    ஔவை தனிப்பாடல்:
    ” ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
    வார்த்தை பதினாயிரத்
    தொருவர் ..” என்றார். (slide 9)

    6
    ‘தமிழ்’என்னும் சொல் புணரும் விதி இது.

    ” தமிழென் கிளவியும் அதனோ ரற்றே ” ( 90-386)

    இ-ள்:
    தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலேயன்றி, அக்கும் பெற்று முடியும் எ-று (slide 10)

    எ-டு:
    தமிழ்+கூத்து = தமிழ்க்கூத்து
    தமிழ்+சங்கம்= தமிழ்ச் சங்கம்

    ‘ அக் ‘ பெற்று வரும் போது,

    தமிழ்+கூத்து = தமிழக் கூத்து
    தமிழ்+சங்கம் = தமிழச் சங்கம்

    பாரதி இதனைத் தன் பாட்டுள் வைக்கிறார்:
    ” விதியே விதியே, தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?” (slide 11)

    7
    ஏழ் என ழகரவீறு புணருமாறு இது:

    ” அளவு நிறையும் எண்ணும் வருவழி
    நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்
    கடிநிலை இன்றே ஆசிரியர் க்க ” ( 94-390)

    இ-ள்:
    அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் வருமொழியாய் வருமிடத்து, நெடுமுதல் குறுகுதலும் உகரம் வருதலும் நிகழும் எ-று (slide 12)

    எ-டு:
    ஏழ்+கடல் = எழுகடல், ஏழு கடல் – இது அளவுப் பெயர்
    ஏழ்+நாழி= எழுநாழி – இது நிறைப்பெயர்
    ஏழ்+மூன்று= எழுமூன்று – இது எண்ணுப் பெயர்

    — புள்ளி மயங்கியல் நிறைவு –

  • Class 11

    இலக்கண வகுப்பு – 11
    தொல்: எழு: இயல் 7, உயிர் மயங்கியல் தொடர்ச்சி, 04/02/26

    சென்ற வகுப்பிலே அகரவீறும், ஆகாரவீறுமான உயிர் புணர்ந்தவாறு பார்த்தோம். அடுத்து இகரவீறு புணர்வதெங்ஙனம் என விளக்கப்படுகிறது.

    1
    ” இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
    வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகும் ” ( 33-236)

    இ-ள் : இகரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர், அதிகாரத்தால் கசதப முதன் மொழியாய் வந்தவழி, வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று

    எ-டு
    கிளிக்கால், கிளிச்சிறகு, கிளித்தலை, கிளிப்பேச்சு.

    ஒரு தனித்துவமான புணர்ச்சியைத் தொல்காப்பியர் இங்கு காட்டுகிறார்.
    இகரவீறு கொண்ட நாழி என்ற சொல், உரி என்ற வருமொழி வரும்போது ‘நாடுரி ‘ எனப் புணரும் என்கிறார்.

    ” உரிவரு காலை நாழிக் கிளவி
    இறுதி இகர மெய்யொடும் கெடுமே
    டகார மொற்றும் ஆவயி னான ” ( 38- 241)
    இ-ள் :
    உரி எனுஞ் சொல் வருமொழியாய் வந்த காலத்து, ‘ நாழி ‘ எனுஞ் சொல் தன்னீற்றில் நின்ற இகரம் தானூர்ந்த மெய்யொடுங் கெடும். அவ்விடத்து ‘ டகரம் ‘ ஒற்றாய் வரும் எ-று -copied

    நாழி+உரி = நாடுரி.
    ( நாழி, உரி என்பன பண்டைய முகத்தலளவை. நாழி = ஒருபடி, உரி = 1/2 படி.)
    ஒளவை நல்வழியில்,
    ” உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் ” என்கிறார்.
    காஞ்சியிலே இறைவன் தந்த இரு நாழி நெல்லைக் கொண்டு, அம்பாள் 32 அறங்களை வளர்த்தாள். அதனால் அவளுக்கு ‘ அறம் வளர்த்த நாயகி ‘ என்ற பெயராயிற்று.-copied
    இதனை அபிராமிபட்டர்,
    ” ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்,
    உய்ய அறஞ் செய்யும் உன்னையும் போற்றி….57 -copied
    2
    ஈகாரவீற்றின் புணர்ச்சி இயல்பு: இது வல்லினம் மிகுத்தும், இன் என்ற சாரியை பெற்றும் குறைந்தளவே புணரும்.
    எ-டு: ஈக்கால், ஈச்சிறகு,
    ஈயின் கால், ஈயின் சிறகு -copied slide6

    3
    உகரவீறு புணரும் வகை சொல்கிறார். மூவகைச் சுட்டெழுத்துகளில் உகரச் சுட்டு வல்லினம் மிக்குவரப் புணரும்.
    எ-டு:
    உ+காளை = உக்காளை. உச்சிறை, உத்தடம், உப்படம். மூவகைச் சுட்டுகளும் தன் என்ற சாரியை பெற்றும் புணரும். அதன் கடை, இதன் சடை, உதன் தடம். Copied, slide 7

    4
    அடுத்து ஊகாரவீறு;
    ” பூவென ஒருபெயர் ஆஇயல் பின்றே
    ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே ” ( 66-269)
    இ-ள்:
    பூ எனும் ஊகாரவீற்றுப் பெயர், மெல்லெழுத்து மிக்கு முடியும், வல்லெழுத்து மிக்கு முடிதலுமுள எ-று copied, slide 8

    பூ+கொடி = பூங்கொடி/ பூக்கொடி
    பூ+செடி = பூஞ்செடி/ பூச்செடி
    பூ+ தாமம் = பூந்தாமம்/பூத்தாமம்
    பூ+பந்து = பூம்பந்து/பூப்பந்து copied . slide 9

    5
    ஏகாரவீறு :
    ஏகாரம் இறுதியாக வருதலரிது.
    ஏகாரம் இடைச் சொற்களாகவும், தேற்றங்களாகவும் புணரும். வேகம், வேகவைத்தல், மறைத்தல் போன்ற பொருளைக் குறிக்க ‘ வே ‘ என்ற எழுத்துப் பயன்படுகிறது.
    வே+குடம் = வேக்குடம். -copied slide 10
    மேலும் எருது, எருமை போன்ற விலங்கை ‘சே’ என்ற சொல்லாற் குறிப்பர். இவை ‘ ஓரெழுத்தொருமொழி’ ஆகும். இச்சொல் ‘இன்’ சாரியை பெற்றுப் புணரும்.
    சே+கொம்பு = சேவின் கொம்பு. -copied, slide 11

    6
    ஐகாரவீற்றுப் புணர்ச்சி பற்றியது இது :
    பனை என்ற சொல்லினீறு ஐகாரம் பெற்று முடிந்தது. இது ‘ அம்’ என்ற சாரியை பெற்றுப் புணர்தல் காணலாம்.
    எ-டு : பனை+காய் = பனங்காய், இவ்வாறே பனம்பழம், பனம்பூ என அம் பெற்று வந்தன.
    Copied, slide 12

    மேலும் பனையும் அட்டும் புணரும் வகை சொல்கிறார் தொல்காப்பியர்.
    ” பனையின் முன்னர் அட்டு வருகாலை
    நிலையின் றாகும் ஐயென் உயிரே
    ஆகாரம் வருதல் ஆவயி னான ” (82-295)
    இ-ள்:
    பனை என்னும் சொல்லின் முன்னர், அட்டு எனுஞ்சொல் வருமொழியாய் வருங்காலத்து, ஐயெனுமுயிர் நிற்றல் இன்றாம். அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம்
    மேல் ஏறிமுடியும் எ-று.

    — உயிர் மயங்கியல் நிறைவு —

  • Class 10

    இலக்கண வகுப்பு – 10
    தொல்:எழு:உயிர்

    மயங்கியல் – இயல் 7

    கடந்த வகுப்பில் உருபியலை நிறைவு செய்திருந்தோம்.
    இவ்வியலில் உயிர் ஈறுகள் எவ்வாறு புணர்கின்றன என்பதைக் கற்கப் போகின்றோம்.

    தூலவுடல் இயங்க உயிர் எந்தளவு முக்கியமோ, அந்தளவுக்குத் தமிழ் இலக்கணத்திற்கு இந்த உயிர்மயங்கியலும் முக்கியமாகக் கொள்ளப் படுகிறது. இங்கு உயிர் 12 எழுத்துகளும் புணர்ச்சி நிலையில் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை இவ்வியல் விளக்குகிறது.

    உயிர் எழுத்தொன்றில் முடிகின்ற சொற்கள், நிலைமொழியாக நிற்கும் காலை, அவ்வுயிரின் முன்னால் கசதப ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்குகின்ற சொற்களும், சிறுபான்மையாக மற்றைய எழுத்துகளில் தொடங்கும் சொற்களும் வந்து புணர்வது இவ்வியலில் விரிவாக விளக்கம் பெற்றுள்ளது.

    அப்புணர்ச்சி நிலைகள் இங்கு அகரவரிசைக் கிரமமாகச் சொல்லப் பட்டுள்ளன. ‘ மயங்குதல் ‘ என்றது கலப்பதையும், புணர்வதையும் குறித்து நிற்கிறது.

    1
    அகரவீற்றுப் பெயர் அல்வழியிற் புணரும் முறையை இத் தலைத் சூத்திரம் விளக்குகிறது. ( வேற்றுமை உருபுகளுடன் புணர்ந்தால் அது ‘ வேற்றுமைப் புணர்ச்சி’,
    அவையல்லாத வேறு வழிகளில் புணர்ந்தால் அது ‘ அல்வழிப் புணர்ச்சி’ எனத் தெளிக!

    ” அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
    வேற்றுமை யல்வழிக் கசதப த்தோன்றின் தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே “
    (7-204)

    இ-ள்:
    அகரமாகிய இறுதியை உடைய பெயர்ச் சொல்லின் முன்பு வேற்றுமை அல்லாத அல்வழிக்கண் கசதப முதன்மொழிகள் வருமொழியாக வருமிடத்து, தத்தமக்குப் பொருந்தின அக் கசதப க்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் எ-று

    எ-டு:
    நீள+கண் = நீளக்கண். நீல+சேலை = நீலச்சேலை.
    நீள+தட்டு= நீளத்தட்டு.
    நீள+பாதை= நீளப்பாதை.
    இதேபோல அகல வுக்கு மொட்டுக.

    2
    அகரவீறு புணர்ந்தவாறு சொன்ன தொல்காப்பியர், அவ்வகரவீற்றின் வினைச்
    சொல்லும், இடைச் சொல்லும் எவ்வாறு புணர்ந்து முடியும் என இச் சூத்திரத்தே சொல்கிறார்.

    ” வினைஎஞ்சு கிளவியும்
    உவமக் கிளவியும் எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும் ஆங்க என்னும்
    உரையசைக் கிளவியும்
    ஞாங்கர்க் கிளர்ந்த வல்லெழுத்து மிகுமே ” ( 2-205)

    இ-ள்:
    அகரவீற்று வினையெச்சமாகிய சொல்லும், உவமச் சொல்லும், ‘ என ‘ என்று சொல்ல வருகின்ற எச்சச் சொல்லும், சுட்டாகிய அகரவீறும், ‘ ஆங்க ‘ என்று சொல்லப்படும் உரையசையாகிய சொல்லும் மேலைச் சூத்திரத்தே சொன்ன வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று -copied

    ( பதப் பொருள் : வினை யெச்சம் = வினையை/வினை முடிவைக் கொண்டு எச்சமாக நிற்கும் சொல்.

    உவமச் சொல் = உவமை உருபுகள். போல, போன்ற, ஒப்ப, புரைய, மான, நிகர, கடுப்ப, நிகர்க்க, அன்ன எனப்பல.
    என – எச்சச் சொல்
    சுட்டகரவீறு = அ

    உரையசைச் சொல் = ஒரு வாக்கியத்தின் ஓட்டத்தைச்
    சீராக்கவும், அழுத்தத்தைகக் கூட்டிக் கொள்ளவும், சொற்களைச் சேர்த்துக் கொள்ளவும் பயன்படுகின்ற ஓரிடைச் சொல். ஆங்க, அந்தில் என்பன தொல்காப்பியர் காட்டும் ‘ உரையசைச் சொல்’ களாகும்.) -copied

    இவ்வகைச் சொற்கள் வல்லெழுத்தோடு புணரும் போது அவ்வல்
    எழுத்துகளான கசதப க்கள் மிகும் என்கிறார்.

    எ-டு: மேலே
    1.உண்ண+கொண்டான்= உண்ணக் கொண்டான்.
    2
    புலிபோல+கிழித்தான்= புலிபோலக் கிழித்தான்
    3
    என+கூறினான்= எனக் கூறினான்
    4
    அந்த+கனி= அந்தக் கனி/அக்கனி
    5
    ஆங்க இளம்பூரணரின் பழைய உரை.
    ( ‘ உண்ண ‘ என்ற இன்றைய வழக்கு, பழம் செய்யுள் வழக்கில் ‘ உண ‘ என்று வருவதால் ‘ உணக் கொண்டான் ‘ என்றார். -copied

    சம்பந்தப் பெருமானும்,

    ” சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால்
    முறையாலே உணத் தருவேன் மொய்பவழத் தொடு தரளம்… என்றருளியமை காண்க.

    3
    ” சுட்டின் முன்னர் ஞநம த்தோன்றின்
    ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும் ” ( 3-206)

    இ-ள்:
    அகரச் சுட்டின் முன்னர் ஞநம க்கள் முதலாகிய மொழி வருமொழியாய்த் தோன்றின், தத்தமக்குப் பொருந்திய ஒற்று இடைக்கண்ணே மிகுதல் வேண்டும் எ-று
    எ-டு:
    அந்த+ஞானம் = அஞ்ஞானம்
    அந்த+நூல் = அந்நூல்
    அந்த+மணி = அம்மணி -copied

    4
    அகரவீறு வன்கணத்தொடும், மென்கணத்தொடும் புணரும்முறை பற்றி சென்ற வகுப்பில் கற்றோம். இங்கு அதனைத் தொடர்கிறோம்.

    இச்சூத்திரத்தில் இடைக்கணம் அகரவீற்றோடு எப்படிப் புணரும் எனத் தொல்காப்பியர் குறிக்கிறார்.

    ” யவ முன் வரினே வகரம் ஒற்றும் ” ( 4-207)

    இ-ள்:
    யகர வகரம் முதன் மொழியாகச் சுட்டின் முன்னே வரின், இடைக்கண் வகரம் ஒற்றும் எ-று-copied

    எ-டு:
    அ+யாழ் = அவ்யாழ்.
    அ+வளை= அவ்வளை
    அ+யானை= அவ்யானை
    அ+வண்டு= அவ்வண்டு -copied

    5
    ‘ வாழிய ‘ எனுஞ் சொல் புணருமாறு காட்டுகிறார்.

    ” வாழிய வென்னுஞ் சேயென் கிளவி, இறுதி அகரம் கெடுதலு முரித்தே “
    ( 9-212 )

    இ-ள்:
    ‘ வாழிய ‘ என்று சொல்லப் படுகின்ற வாழுங்காலம் அண்மையன்றிச் சேய்மைய என்றுணர்த்தும் சொல்; தன்னிறுதிக்கண் அகரமும், அதனாற் பற்றப்பட்ட யகரமும் கெடாது முடிதலும், கெட்டு முடிதலும் உரியதாம் எ-று -copied

    எ-டு:
    வாழிய+மன்னா = வாழி மன்னா. வாழிய+தமிழ்= வாழிதமிழ்.
    ( இங்கு யகரம் கெட்டது)

    ” வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு ” – பாரதி
    ( இங்கு கெடாமல் பாடியுள்ளார்)

    சேக்கிழார் பெருமானும்,
    ” வாழிமாதவர் ஆலால சுந்தரர் வழியிடை அருள் செய்த …” என்றருளி ‘ வாழிய மாதவர் ‘ என்றதை
    தொல்காப்பியர் வழி நின்று, ‘பற்றப்படும் யகரமும் கெடும் ‘ என்ற சூத்திரப்படி, ” வாழி மாதவர் ” என்றருளியமை காண்க. -copied

    இன்னுமொன்று :
    சிலம்பின் கானல்வரிப் பாடலிலே இளங்கோவடிகள்;

    “…கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி, .. பெருங் கற்பு என்றறிந்தேன் வாழி காவேரி …. நடந்தாய் வாழி காவேரி… வளனே வாழி காவேரி.. ” எனப் பாடுகிறார். -copied

    6
    அடுத்து ஆகாரவீற்றுப் புணர்ச்சி இது.

    ” மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
    ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன
    அகரம் வல்லெழுத்தவை அவண்நிலையா
    னகரம் ஒற்றும் ஆவும் மாவும் ” (29-232)

    இ-ள் :
    மாமரமாகிய சொல்லும், ஆ எனும் சொல்லும், மா எனும் சொல்லுமாகிய அம்மூன்று பெயர்ச் சொற்களும், மெல்லெழுத்துப் பெற்று முடிதலுமுடையன. அவற்றுள் ஆவும் மாவும், முன்பெற்று நின்ற அகரமும், வல்லெழுத்துமாகிய அவை, அவ்விடத்து நிலை பெறாமல் னகரம் ஒற்றாகப் பெற்று முடியும் எ-று

    எ-டு:
    மா+கொப்பு = மாங்கொப்பு
    மா+தோல்= மாந்தோல்
    மா+பூ= மாம்பூ

    ஆ+கன்று = ஆன்கன்று
    ஆ+செவி = ஆன்செவி
    மா+கோடு= மான்கோடு
    மா+ செவி = மான்செவி.

    — இவ் வகுப்பு நிறைவு –

  • Class 9

    இலக்கண வகுப்பு – 9
    தொல்: எழு: இயல் 6 – உருபியல் ( 24/12/2025)

    வேற்றுமை உருபுகள் பெயர்ச் சொற்களோடு புணருவதைக் கூறும் இயல்.
    புணர்ச்சி நடைபெறும் போது பெயர்களுக்கும், வேற்றுமை உருபுகளுக்கும் இடையே சாரியைகள் தோற்றம் பெறுகின்றன. அதனால் சில பெயர்ச் சொற்கள் வேறுபாடுகளை அடைகின்றன. இதில் 30 நூற்பாக்கள்.
    1
    அகரவீறு முதலியவற்றில் வேற்றுமை உருபு புணரும் போது ‘ இன் ‘ சாரியை தோன்றும்.
    ” அஆஉ ஊஏஔ என்னும் அப்பாலாறன் நிலைமொழி முன்னர்
    வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை ” (1-174)

    இ-ள்:
    அஆஉஊஏஔ என்ற அக்கூற்று ஆறையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர், வேற்றுமை உருபுகள் வருமொழியாய் வந்த நிலைமைக்கு இடைவரும் சாரியை ‘ இன் ‘ சாரியையாகும் எ-று
    எ-டு:
    விளவினை = விள+இன்+ஐ. ( ஐ – 2 வே-மை)
    விளவினொடு = விள+இன்+ஒடு. ( ஒடு – 3 வே-மை)
    விளவிற்கு/விளவினற்கு = விள+இன்+கு.
    ( கு-4 வே-மை)

    விளவினின் = விள+இன்+இன் ( இன்-5 வே-மை)
    விளவினது = விள+இன்+அது (அது – 6 வே-மை)
    விளவின்கண் = விள+இன்+கண் ( கண் – 7 வே-மை)
    ஆவினை = ஆ+இன்+ஐ
    ஆவினொடு = ஆ+இன்+ஒடு
    ஆவினுக்கு = ஆ+இன்+கு

    எடுத்துக் காட்டு திருமுறை:
    “பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
    கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
    நாவினுக்கு அருங்கலம் நமச் சிவாயவே “
    ( அப்பர் சுவாமிகள் – திருமுறை 4 )
    ( இதேவழி ஆ, உ, ஊ, ஏ, ஔ ஆகிய உயிரீறுகளுக்கும் ஒட்டுக)

    2
    அகரவீறுக்கு, பன்மைப் பெயர்கள் வரும்புழி, ‘ வற்று ‘ சாரியை வரும்.
    ” பல்லவை நுதலிய அகர இறுபெயர் வற்றொடு சிவணல் எச்சமின்றே ” ( 2-175)

    இ-ள்:
    பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரமானது, வற்றுச் சாரியையொடு பொருந்துதலை ஒழிதல் இல்லை எ-று

    எ-டு:
    பல்+ ஐ = பலவற்றை ( பலவற்றை)
    இவ்வாறே, பலவற்றொடு, பலவற்றிற்கு, பலவற்றின், பலவற்றினது, பலவற்றின்கண் எனவரும்.
    மேலும் ‘ யா ‘ , ‘ யாவை ‘ என்ற வினாவெழுத்து களுக்கும் வற்றுச் சாரியையே வரும்.

    யா + ஐ = யாவற்றை, யாவற்றொடு, யாவற்றிற்கு, யாவற்றின்,யாவற்றினது, யாவற்றின்கண் எனவும் அமையும்.

    3
    இதேவழி, உகர ஈற்றிற்கு- சுட்டாக – ‘ அன் ‘ என்ற சாரியை வரும்.
    ” சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்மொழித் துகரம் கெடுமே ”(4-177)
    இ-ள்:
    சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகரவீற்றுச் சொல்லானது, அன் சாரியையோடும் பொருந்தி, தான் பொருந்திய மெய்யை ஒழித்து ( உகரம்) கெடும் எ-று
    எ-டு:
    அது+ஐ= அதனை
    இது+ஐ = இதனை
    உது+ஐ = உதனை

    இவ்வாறே ஏனைய உருபுகளான ஒடு,கு,இன், அது,கண் ஆகியவற்றுடனும் ஒட்டுக.
    இவ்வழியே, ஐகார ஈற்றுக்கும் கண்டு கொள்க! ( வற்றுச் சாரியையே வரும். அவற்றை, இவற்றை, உவற்றை)
    4
    ‘நீ’ என்ற ஈகாரவீற்றுப் பெயருக்கு னகரவொற்றுச் சாரியை வரும்.
    ” நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயின் னகரம் ஒற்றா கும்மே ” ( 7-180)

    இ-ள்:
    நீ என்னும் ஒரு பெயர் நெடிதாகிய முதல் குறுகும், அவ்விடத்தே வரும் னகரம் ஒற்றாகும் எ-று
    எ-டு:
    நீ+ஐ = நின்னை
    நீ+ஒடு = நின்னொடு
    நீ+கு= நினக்கு/நினற்கு

    ” நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா ” – பாரதியார்
    ” ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் ” — வள்ளலார்
    ” நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்…
    நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே”
    — பெருமாள் திருமொழி
    குலசேகராழ்வார்.

    5
    குற்றியலுகரம் ஈறாக வருகின்ற திசைகளின் பெயர், ஏழனுருபிற் சாரியை பெறாமலும், இன் சாரியை பெற்றும் வரும் என்கிறார் திரண தூமாக்கினியார்.
    ” ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
    சாரியைக் கிளவி இயற்கையு மாகும்
    ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே “
    ( 29-202)
    இ-ள்:
    ‘ கண் ‘ என்ற ஏழாம் வேற்றுமை உருபிற்கு திசைப் பெயர்களின் முன்னர், இன் சாரியை நின்று முடிதலே அன்றி, இயல்பாகவும் முடியும்.

    எ-டு:
    வடக்கு+இன் = வடக்கின், கிழக்கின், தெற்கின், மேற்கின்.
    ஆனால்,
    வடக்கு+கண் = வடக்கண்
    (வடக்கின் கண் என்பது பிழை) கிழக்கண், தெற்கண், மேற்கண் என்பன காண்க.

    வன்றொண்டப் பெருமான் ஏழாம் திருமுறையில்;

    ” …மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்…”என அருளுகிறார்.

    — இவ் வகுப்பு நிறைவு —